உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
2. நாடு பாயிற்று |
|
படிறு
நீக்கும் படுநுகம் பூண்ட 10
குடிகட் கெல்லாங் குளிர்ப்பக்
கூறித்
திருந்திய சிறப்பிற் றேவ
தானமும்
அருந்தவர் பள்ளியு மருகத்
தானமும்
திருந்துதொழி லந்தண ரிருந்த
விடனும்
தோட்டமும் வாவியுங் கூட்டிய நல்வினை
15 ஆவணக் கடையு மந்தியுந்
தெருவும் தேவ
குலனும் யாவையும் மற்றவை
சிதைந்தவை யெல்லாம் புதைந்தவை
புதுக்கென்
றிழந்த மாந்தரு மெய்துக
தமவெனத்
தழங்குரன் முரசந் தலைத்தலை யறைகெனச்
|
|
(இதுவுமது)
9 - 19 :
படிறு......................அறைகென்
|
|
(பொழிப்புரை) நாட்டின்கண் பொய், கொலை, களவு, வஞ்சம்
முதலிய தீமைகளை நீக்குகின்ற தனது அரசியற் சுமையைத் தாங்காநின்ற தன்
குடிமக்கட்கெல்லாம் உள்ளம் குளிர முகமன் கூறி, திருத்தமுடைய சிறப்பினையுடைய
தேவாலயங்களையும் செயற்கரிய தவம் செய்யும் துறவோர் பள்ளிகளையும் அருகன்
கோயில்களையும் திருந்திய நற்றொழிலையுடைய அந்தணர் வாழ்கின்ற சேரிகளையும்
தோட்டங்களையும் குளங்களையும் பற்பலவிடங்களினின்றும் கலத்தினும் காலினும் கொணர்ந்து
ஒருங்கு சேர்த்த பண்டங்களையும் கொள்வதூஉம் மிகைகொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது
பிறவும் தமபோல் நாடி வாணிகம் செய்யும் நல்ல தொழிலையுடைய கடைத் தெருக்களையும்
சந்திகளையும் தெருக்களையும் தேவகோட்டங்களையும் இன்னோரன்ன பிறவற்றையும் அவற்றுள்
சிதைந்து போனவைகளையும் புதைந்து போனவைகளையும் புதுப்பித்திடுக என்று பகைமன்னனாலே
பொருள் இழக்கப்பட்ட நங்குடிமக்கள் மீண்டும் அப்பொருளைப் பெற்றுக்கொள்க என்றும்
கூறி முழங்கா நின்ற ஓசையினையுடைய முரசங்களை இடந்தொறும் இடந்தொறும் அறைந்து
அறிவுறுத்துவீராக என்று கட்டளை யிடா நிற்ப; என்க.
|
|
(விளக்கம்) படிறு - பொய் முதலிய தீங்குகள். அரசியற்
சுமையைத் தாங்குபவர் குடிகளேயாதலின் படுநுகம் பூண்ட குடி என்றார். குளிர்ப்பக் கூறி
என்றது, கடுஞ்சொலன் அன்மையை விளக்கி நின்றது. தேவதானம் - தேவாலயம். அருகத்தானம்
- அருகன்கோயில். உலகம் திருந்துதற்குரிய தொழிலையுடைய அந்தணர் என்க. அவை ஓதலும்
ஓதுவித்தலும் வேட்டலும் வேட்பித்தலும் ஈதலும் ஏற்றலும் என்னும் இவ்வாறு தொழிலுமாம்.
ஆவணமாகிய கடை என்க. அந்தி - சந்தி. தெரு - மாந்தர்வாழும் தெரு. குலன் : குலம் -
கோயில். புதைந்தவை தூர்ந்தவையுமாம் நிலத்துள் புதையுண்டனவுமாம். தம - தம்முடையன.
தழங்குரல் - தழங்குகுரல் : விகாரம.
|