பக்கம் எண் :

பக்கம் எண்:55

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
           வீழ்துணை மாதர் விளிவுநினைந் திரங்கி
           வாழ்த லாற்றான் வாய்மொழி யரசன்
     65    உற்றவ னாருயி ருய்தல் வேண்டி
           இற்றவள் பிறந்துழிக் காட்டு மந்திரம்
           கற்றுவினை நவின்றனென் காட்டுவெ னினக்கென
           வஞ்ச மாயினு நெஞ்சுவலி யுறுக்கெனக்
           கண்கவர் பேரொளிக் காகதுண் டகனெனும்
     70    அந்த ணாளனை யமைச்சர் தருதலின்
 
                 (அமைச்சர் செயல்)
             63 - 70 : வீழ்துணை,,,,,,,,.தருதலின்
 
(பொழிப்புரை) தான் பெரிதும் விரும்புகின்ற வாழ்க்கைத்
  துணைவியாகிய வாசவதத்தையின் சாவினை நினைந்து
  நினைந்து இரங்கி நம் வாய்மைமிக்க அரசனான உதயணகுமரன்
  இனி உயிர் வாழ்தல் செய்யான் என்று கருதி அவனுடைய அரிய
  உயிர் உய்தலின் பொருட்டுச் சூழ்ச்சிசெய்து அமைச்சராகிய
  உருமண்ணுவா முதலியோர் கண்டோர் கண்ணைக் கவரும்
  பேரொளி படைத்த ''காகதுண்டகன்'' என்னும் ஒரு துறவியைக் கண்டு
  வணங்கி 'பெரியோய்! பொய்ம் மொழியே யாயினும் நீ எம்மரசன்
  பால் வந்து யான் இறந்துபட்ட நின் காதலி பிறந்த இடத்தைக்
  கண்கூடாகக் காட்டு மொரு மந்திரத்தைப் பயின்றுளேன் அவ்வாறு
  முன்னரும் அவ்வருஞ்செயலைச் செய்துமிருக்கின்றேன். ஆதலால்
  நின் மனைவியையும் நினக்குக் காட்டுவேன் காண்! ' என்று கூறி
  அவன் இறந்துபடாவண்ணம் அவன் நெஞ்சினைத் தேற்றி வலியுடைய
  தாக்கியருளுக என்றிரந்து அம்முனிவனை உதயணன்பால் அழைத்து
  வருதலாலே என்க.
 
(விளக்கம்) வீழ்துணை-வினைத்தொகை. மாதர்-வாசவதத்தை.
  விளிவு - சாவு. வாய்மொழி - உண்மை பேசுகின்ற. அரசன் -
  உதயணன். இற்றவள் - இறந்தவள். வினைநவின்றனென். அத்தொழிலைச்
  செய்து பழகியுளேன். வஞ்சம் - பொய். புரைதீர்ந்த நன்மை பயத்தலின்
  இப்பொய் கூறுதல் தகும் என்பார் வஞ்சமாயினும் கூறுக என்றார். இதனை,
         'பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
          நன்மை பயக்கு மெனின்' (குறள்-292)
  என்பதனானுமுணர்க.