பக்கம் எண் :

பக்கம் எண்:552

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
          நிறைப்பெருங் கோலத்து நெறிமையின் வழாஅ
          உறுப்புக் குறை பட்டீ ருட்படப் பிறரும்
          வந்தனிர் குறுகி நுங்குறை யுரைத்துத்
          துன்ப நீங்க வின்பம் பயப்ப
          வேண்டின கொள்ளப் பெறுதிர் நீரென
 40       மாண்ட வீதியொடு மன்ற மெல்லாம்
          ஆர்குரன் முரச மோவா ததிரக்
 
                      (இதுவுமது)
              35 - 41 : நிறை................அதிர
 
(பொழிப்புரை) நிறைந்த பேரழகினையுடைய வீதிகளிலே செல்லுங்கால் வழுவித் தேர் முதலிய ஊர்திகளால் உறுப்புகளிழந்து குறையப்பட்டீரும், இன்னோரன்ன பிறரும் வந்து அணுகி உங்கள் துன்பம் நீங்கவும் நுங்கள் வாழ்க்கை நுமக்கு இன்பம் உண்டாக்கவும் நுமக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்களையெல்லாம் பெற்றுக்கொள்ளக் கடவீர் ! என்று அறிவியாநின்ற ஆரவாரமுடைய ஓசையையுடைய அறமுரசங்கள் மாட்சிமையுடைய தெருக்களிலும், மன்றங்களிலும் இடையறாது முழங்காநிற்பவும், என்க.
 
(விளக்கம்) நிறைப்பெருங்கோலத்து நெறிமை என்றது, ஒப்பனையையுடைய வீதிகளில் செல்லும் முறைமையை. வழுவுதல் - அறியாமையால் தவறி நடத்தல். வழாஅ உறுப்புக் குறைபட்டீர் எனவே தேர் முதலியவற்றிற் றாக்குண்டு உறுப்புக்களையிழந்தவர்களை அரசியலார் பாதுகாத்தல் வேண்டும் என்பது பண்டைக் காலத்து அரசியல் நீதிஎன்பது உணரப்படும். குறை - இன்றியமையாத வேண்டு கோள். வேண்டியன - வேண்டப்படும் பொருள். மாண்ட வீதி - சிறப்பான வீதிகள். மன்றம் - நகராள் மன்றம்; அறவோர் மன்றம் இன்னோரன்ன. ஆர்குரல் : வினைத்தொகை. முரசம் - அறமுரசம். ஓவாது - ஒழியாமல்.