உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
2. நாடு பாயிற்று |
|
கோடி முற்றி நாடொறும்
வருவன நாடு நகரமு நளிமலை
முட்டமும் உள்கண் டமைந்த
கொள்குறி நுகும்பிற் 45 கணக்கருந் திணைகளு மமைக்குமுறை
பிழையாது வாயிற் செல்வங் கோயிலுட்
கொணரப்
|
|
(இதுவுமது)
42 - 46 : கோடி..........கொணர
|
|
(பொழிப்புரை) கோடியென்னும் பேரெண்ணின் மேலும் பெருகி
ஒவ்வொரு நாளும் வாராநின்ற வருவாய்ப் பொருள்களை நாட்டினும் நகரங்களினும் செறிந்த
மலைப்பக்கங்களில் வழி முட்டாயிருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும்
உட்சென்று பார்வையிட்டுக் கொள்ளும் கணக்குகளை எழுதிய பனையோலைகளையுடைய கணக்க
மாந்தரும் திணைமாந்தரும் அப்பொருள்களைக் கொணர்ந்து வாயிலில் குவித்த அச்
செல்வங்களை நாள்தோறும் அரண்மனைக்குள் கொணரா நிற்பவும்;
என்க.
|
|
(விளக்கம்) கோடி - ஒரு பேரெண். கோடியென்னும் பேரெண்ணும்
நிரம்பி மேலும் பெருகி நாடோறும் வரும் வருவாய் என்க.நளிமலை முட்டம் - செறிந்த
மலைப்பக்கங்களில் வழி முட்டாயிருக்கும் இடங்கள். இவை சுங்கங் கொள்ளும் இடங்கள்
என்க. பொருள்களை ஆராய்ந்து கண்டு அவற்றிற்கு விதிக்கும் இறைப் பொருள் கொள்ளும்
குறிப்பமைந்த நுகும்பு என்க. நுகும்பு - பனையோலை. அமைக்கும் முறை - அப்பொருள்களை இனம்
இனமாகப் பிரித்து இலச்சினையிட்டு வைக்கும் முறை. வாயிலில் வந்து குவிந்த
செல்வங்களைக் கோயிலுள் கொணர என்க. இது வருவாய்
கூறிற்று.
|