பக்கம் எண் :

பக்கம் எண்:56

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
            அருமதி யண்ணற் கவனிது கூறும்
           இருமதி யெல்லை யியைந்த விரதமொ
           டிரக்க மின்றி யிருக்கல் வேண்டும்
           அத்துணை யிருந்தபி னருங்காட் டகவயின்
    75     மொய்த்தழ லீமத்து முன்னர்க் காட்டிய
           தவாஅ வன்பிற் றவமா சாதனை
           போகிய பொழுதி னாகிய நலத்தொடு
           மேலை யாகிய வடிவின ளாகி
           மற்றவ ளடைவது தெற்றெனத் தெளியெனக்
 
                 (காகதுண்டக முனிவன் கூற்று)
                 71 - 79 ; அருமதி............தெளியென
 
(பொழிப்புரை) பெறலரிய அறிவினையுடைய அண்ணலாகிய
  உதயணகுமரனை நோக்கி அந்தத் துறவி இவ்வாறு கூறுவார்;- ''ஐய!
  நீ இரண்டு திங்களளவும் பொருந்திய நோன்பினோடு நின்
  மனைவியை நினைந்து இரங்குதலின்றி இருத்தல் வேண்டும்!
  அத்துணைக்காலம் நீ அவ்வாறிருந்த பின்னர் யான் இருத்தற்கரிய
  நன்காட்டின்கண் பற்றியெரியும் தீயிற்குரிய பிணஞ்சுடு விறகடுக்கின்
  மேலிருந்து நின் மனைவியை நினக்கு- முன்னர்க் கண்கூடாகக்
  காட்டும்பொருட்டுக் கெடாத அன்போடு செய்கின்ற தவமாகிய
  பெரிய செய்கையைச் செய்துமுடித்தபொழுதே முற்பிறப்பிலேயுண்டான
  தன் பழைய வடிவத்தையுடையவளாய் இத்தவத்தால் உற்ற புத்தழகோடே
  இறந்துபட்ட நின்மனைவி நின்முன்னர் வருவதனை நீ  நன்கு
  தெரிந்துகொள்க!'' என்று கூறி என்க.
 
(விளக்கம்) அண்ணல்-உதயண குமரன். அவன் - காகதுண்டக
  முனிவன். அத்துணை - அவ்வளவு காலம். காடு - நன்காடு, ஈமம் -
  பிணஞ்சுட அடுக்கிய விறகடுக்கு. மாசாதனை-பெரிய செய்கை - மற்றவள்
  - வாசவதத்தை.