பக்கம் எண் :

பக்கம் எண்:560

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
         போரின் வாழ்நரும் புலத்தின் வாழ்நரும்
         தாரின் வாழ்நருந் தவாஅப் பண்டத்துப்
         பயத்தின் வாழ்நரும் படியிற் றிரியா
 50      ஓத்தின் வாழ்நரு மொழுக்கின் வாழ்நரும்
         யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும்
         உயர்ந்தோர் தலையா விழிந்தோ ரீறா
 
                     (இதுவுமது)
            47 - 53 : போரின்...........இன்றி
 
(பொழிப்புரை) தன் நாட்டின்கண் போர்த் தொழில் பற்றி வாழும் மறவர்களும், கழனிகளை உழுதுவாழும் உழவர்களும், ஆடை நெய்து வாழ்வோரும், கெடாத பண்டங்களை விற்று வரும் ஊதியத்தால் வாழும் வணிகர்களும், உலகின்கண் தம்மொழுக்கத்தினின்றும் பிறழாதவரும், மறையோதி வாழுநரும் ஆகிய பார்ப்பனரும் இல்லறமும் துறவறமும் ஆகிய நெறிகளிலே பிறழாது நின்று ஒழுகும் இருவகை அறவோரும் கட்டிய அளவு கயிற்றினையுடைய சிற்பத் தொழிலால் வாழ்வோரும் இங்குக் கூறப்பட்ட இவர்களுள் வைத்துச் சிறந்தோர் முதலாகத் தாழ்ந்தோர் ஈறாக உள்ள எந்நிலையரேனும் ஒருசிறிதும் தீதின்றி வாழாநிற்பவும்; என்க.
 
(விளக்கம்) போரின் வாழ்நர் - மறவர் முதலியோர். புலத்தின் வாழ்நர் - உழவரும் உழுவிப்போரும் என்க. தாரின் வாழ்நர் - நெய்தற்றொழிலாளர். தார் - ஒரு நெய்தற்கருவி. தவா - கெடாத, பண்டத்துப் பயம் - பண்டத்தை விற்பதனால் வரும் ஊதியம். படி - உலகம். தன் தன்மை யெனினுமாம். ஓத்து - நூலோதுதல். ஒழுக்கின் வாழ்நர் - அறவோர். தீதொன்றின்றி இனிதே வாழா நிற்பவும் என வருவித்தோதுக.