| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 2. நாடு பாயிற்று |
| |
மறனி னெருங்கி நெறிமையி
னொரீஇக் 55 கூற்றுயிர் கோடலு மாற்றா
தாக உட்குறு செங்கோ லூறின்று
நடப்ப யாறுந் தொட்டவு முறுவன
வொழுகக் காடும் புறவுங்
கவின்றுவளஞ் சிறப்பப் பொய்யா
மாரித் தாகி வைகலும் 60 தண்டா வின்பந்
தலைத்தலை சிறப்ப
|
| |
(இதுவுமது)
54 - 60 : மறனின்...............சிறப்ப
|
| |
| (பொழிப்புரை) கூற்றுவன்றானும் தன்னுடைய வீரத்தால்
நெருங்கிவந்து முறைமையிற் பிறழ்ந்து உயிர்களைக் கவர்தல் இயலா தவனாகவும், பகைமன்னர்
அஞ்சுதற்குக் காரணமாகத் தனது செங்கோல் இடையூறின்றி நடவாநிற்பவும், யாறுகளும் கிணறு
முதலியனவும் நீர் பெருகி ஒழுகாநிற்பவும், பெருங்காடும் சிறு காடுகளும் அழகுற்று வளத்தால்
மிகும்படி பருவம் பொய்யாமல் பெய்கின்ற மழையையுடைத்தாய் நாள்தோறும் இடந்தோறும்
இடந்தோறும் குறையாத இன்பம் சிறவா நிற்பவும்; என்க.
|
| |
| (விளக்கம்) கூற்றுவன் உயிர்களை அவ்வவற்றிற்கு அமைந்த வயது
முதிர்ந்த பின்னர்க் கவர்வதன்றி அம்முறை கெடக் கவராதிருக்கும்படி என்றவாறு. எனவே
அந்நாட்டின்கண் வறுமையானும் பிணிகளானும் உயிரினங்கள் சாதலில்லை என்றாயிற்று. உட்குறு
- பகைவர் அஞ்சுதற்குக் காரணமான. ஊறு - இடையூறு. தொட்டவும் - கிணறு முதலியனவும்.
யாறுகள் நீர் வறந்த கோடையினும் ஊற்று நீரால் உலகளிக்கும் என்பார் யாறும் ஊறுவன ஒழுக
என்றார். காடு - புறவு என்பன பெருங்காடும் சிறுகாடும் என்னும் பொருளன.
கவின்று - அழகெய்தி. மாரித்து - மாரியையுடையது. வைகலும் - நாள்தோறும். தண்டா -
குறையாத. தலைத்தலை - இடந்தொறும் இடந்தொறும். சிறப்ப - பெருகா
நிற்ப.
|