பக்கம் எண் :

பக்கம் எண்:562

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
         விண்டோய் வெற்பின் விளைகுர லேனற்
         குறவ ரெறிந்த கோலக் குளிர்மணி
         முல்லை தலையணிந்த முஞ்ஞை வேலிக்
         கொல்லை வாயிற் குப்பையுள் வீழவும்
 65      புன்புல வுழவர் படைமிளிர்த் திட்ட
         ஒண்கதிர்த் திருமணி யங்கண் யாணர்
         மருத மகளிர் வண்டலுள் வீழவும்
         வயலோ ரெடுத்த கௌவைக் கிருங்கழிக்
         கயல்கொள் பொலம்புள் கதுமென வெருவவும்
 70      திணைவிராய் மணந்து திருவிழை தகைத்தாக்
 
                   (இதுவுமது)
            61 - 70 : விண்....................தகைத்தா
 
(பொழிப்புரை) வானுற உயர்ந்த மலைகளின்கண் விளைகின்ற தினைக்கதிரைக் காக்குங் குறவர்கள் எறிந்த அழகிய குளிர்ந்த மணிகள் முல்லை மலர்களை உச்சியிலே அணிந்துகொண்டுள்ள முன்னை மரங்களை வேலியாக உடைய முல்லைநிலக் கொல்லையில் வாழ்கின்ற இடையர்களின் முன்றிலின்கண் கிடக்கும் குப்பையுள் வீழா நிற்பவும், அந்த முல்லை நிலத்தை உழா நின்ற உழவருடைய கலப்பை புரட்டிவிட்ட ஒள்ளிய ஒளியையுடைய அழகிய மணிகள் அழகிய கண்களையும் அழகினையும் உடைய மருத நிலத்துச் சிறுமியர் விளையாடும் இடங்களிலே வீழாநிற்பவும், அம்மருத நிலத்தின்கண் நாறுநடும் உழத்தியர் பாடும் பாட்டின் ஆரவாரத்திற்கு நெய்தல் நிலத்தின்கண் உள்ள கரிய கழியின்கண் கயல் மீன்களை எறியா நின்ற பொன்வாய்ப்புள் ஞெரேலென அஞ்சா நிற்பவும், இவ்வாறு குறிஞ்சி முதலிய நானிலங்களும் தம்முள் மயங்கா நிற்பவும் திருமகளே விரும்புதற்குக் காரணமான தன்மையை உடையதாக; என்க.
 
(விளக்கம்) குளிர்மணி - முத்து. ஏனல் காக்கும் குறவர் எறிந்த மணி என்க. முல்லை - முல்லைமலர். முஞ்ஞை - முன்னை. முன்னை மரத்தின் உச்சியில் முல்லைபடர்ந்து மலர்ந்திருக்கும் கொல்லை என்றவாறு. கொல்லை - முல்லை நிலம். புன்புலம் - முல்லை நிலம். படை - கலப்பை. மிளிர்த்திட்ட - புரட்டிவிட்ட. திருமணி - மாணிக்கமணி. அங்கண் - அழகிய கண். யாணர் - அழகு இனி, அங்கண் யாணர் மருதம் எனக்கொண்டு அழகிய இடத்தையும் புதுவருவாயையுமுடைய மருத நிலம் எனினுமாம். "ஐம்பாற்றிணையுங் கவினி" என்றார் மதுரைக் காஞ்சியினும். திருவிழை தகைத்தா - திருமகளும் விரும்பும் தன்மையை உடையதாக.