பக்கம் எண் :

பக்கம் எண்:563

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
         களவு மரம்புங் கனவினு மின்றி
         விளைத லோவா வியன்பெரு நாட்டொடு
         பட்டி நியமம் பதிமுறை யிரீஇ
         முட்டின்று நிரம்பிய காலை யொட்டாப்
 75      பகைப்புலந் தேயப் பல்களிற் றியானையொடு
         தகைப்பெருந் தம்பியர் தலைச் சென் றகற்ற
         ஆணை கேட்ட வகலிடத் துயிர்கட்
         கேம வெண்குடை யின்னிழற் பரப்பி
 
                   (இதுவுமது)
            71 - 78 : களவும்................பரப்பி
 
(பொழிப்புரை) கள்வோரையும் அரசலைக்கும் குறும்பரையும் கனவினும் இல்லாததாய், விளைதல் ஒழியாத பெரிய மாவட்டத்தோடு பட்டிகளும் நியமமும் ஆகிய நில வேற்றுமைகளை வரையறுத்து இறைமுறைமையில் இருத்தி இங்ஙனமாகத் தன் நாட்டின்கண் ஒரு சிறிதும் முட்டுப்பாடின்றி எல்லா நலங்களும் நிரம்பிய காலத்தே அவ்வுதயண மன்னனுடைய பெருந்தகைத் தம்பியராகிய கடகபிங்கலர்கள் அந் நாட்டின் புறத்தேயுள்ள பகைப்புலங்கள் தேய்ந்தொழியும்படி பலவாகிய களிற்றியானைப் படை முதலிய நால்வகைப் படைகளுடன் அவ்வவ் விடங்களுக்குச் சென்று போரிட்டு வென்று பகைவர் யாருமில்லாமல் அகற்றாநிற்ப அவ்வுதயண மன்னன் தனது அகன்ற நாட்டின்கண் தன் ஆணைவழி நின்று வாழாநின்ற உயிர்கட்கெல்லாம் பாதுகாவலாகத் தன்னுடைய கொற்றவெண்குடையினது இனிய நிழலை யாண்டும் பரப்பி; என்க.
 
(விளக்கம்) களவு - கள்வோர், அரம்பு - குறும்பு. பெருநாடு. பட்டி, நியமம் என்பன மாவட்டம் வட்டம் கோட்டம் கூற்றம் என்பன போன்ற இடப்பெயர்கள். இவை இறைமுறைமைக்காக வகுக்கப்படுதலின் ''பதிமுறை'' என்றார். ஒட்டாப்பகைப் புலம் - தன்னோடிணையாத பகைவர் நாடு. பெருந்தகைத் தம்பியர் என்க. ஏமம் - பாதுகாப்பு. null