பக்கம் எண் :

பக்கம் எண்:564

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
         வீணை வேந்தன் வியனாடு கெழீஇ
 80      மகத மன்னவன் றானையொடு வந்த
         பகையடு மறவரைப் பதிவயிற் போக்கி
         அருவிலை நன்கல மமைந்தவை பிறவும்
         தருசகன் கொள்கெனத் தமரொடு போக்கிப்
         பட்ட மெய்திய பதுமா பதியொடு
 85      முட்டில் செல்வத்து முனிதல் செல்லான்
         மட்டுவிளை கோதையொடு மகிழ்ந்துவிளை யாடிச்
 
                (உதயணன் செயல்)
           79 - 86 : வீணை...................விளையாடி
 
(பொழிப்புரை) யாழ்ப்புலவனாகிய அவ்வுதயணவேந்தன் இவ்வாறு பரப்பிய தன் நாட்டிற் பொருந்தித் தன்பொருட்டு மகதமன்னவனாகிய தருசகனுடைய படையொடு வந்தவரும் பகைவரைக் கொல்லுந்திறல் படைத்தவருமாகிய தண்டத்தலைவர்களுக்கு வரிசை பல வழங்கி மகத நாட்டிற்கு விடுத்துப் பின்னரும் அத்தருசக மன்னன் எற்றுக்கொள்க என்று அரிய விலையினையுடைய பேரணிகலன்களையும் அத்தருசக மன்னன் மாண்பிற்கேற்ற பிற பொருள்களையும் அவனுக்கு வழங்கும்படி தன் சுற்றத்தார்பால் கொடுத்து அம் மகத நாட்டிற்குச் செலுத்திய பின்னர்க் கோப்பெருந்தேவி என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற பதுமாபதியோடு முட்டுப்பாடில்லாத செல்வ நுகர்ச்சியின் கண்ணே சிறிதும் வெறுப்பின்றித் தேனொழுகுகின்ற மலர்மாலையையுடைய அக்கோமகளோடு மகிழ்ந்து விளையாடி; என்க.
 
(விளக்கம்) வீணைவேந்தன் : உதயணன். நாடு: வத்தவநாடு. மகத மன்னவன் தருசகன். மறவர் - ஈண்டு தண்டத்தலைவர். பதி : மகதநாடு. தமர் - தன்சுற்றத்தார். பட்டம் - கோப்பெருந்தேவி என்னும் பட்டம். முனிதல் செல்லான் ஒருசொல். முனியான்; வெறான். மட்டு - தேன். கோதை : பதுமாபதி.