பக்கம் எண் :

பக்கம் எண்:565

உரை
 
4. வத்தவ காண்டம்
 
2. நாடு பாயிற்று
 
          செங்கதிர்ச் செல்வ னெழுச்சியும் பாடும்
          திங்களு நாளுந் தெளிதல் செல்லான்
          அந்தளிர்க் கோதையை முந்துதா னெய்திய
 90       இன்பக் கிழவ னிடவகை யன்றி
          மன்பெரு மகதன் கோயிலுள் வான்றோய்
          கன்னி மாடத்துப் பன்முறை யவளொடு
          கழிந்தவும் பிறவுங் கட்டுரை மொழிந்து
          பொன்னிழை மாதரொ டின்மகிழ் வெய்திப்
 95       பெருநகர் வரைப்பிற் றிருமனை யிருந்து
          தீயன நீக்கித் திருவிழை தகைத்தாப்
          பாயினன் மாதோ பயந்தநன் னாடென்.
 
                     (இதுவுமது)
           87 - 97 : செங்கதிர்..........நாடென்
 
(பொழிப்புரை) ஞாயிற்றினது தோற்றத்தையும் மறைவினையும் திங்களையும் நாளையும் சிறிதும் அறிதல் இல்லானாய்ப் பதுமாபதியின் போகத்தின்கண் அழுந்தி அழகிய தளிர்மாலை புனைந்து அக் கோமகளை முற்படத் தான் கண்டு எய்திய மன்மதன் கோயிலுக்குள் குறியிடம்பெற்றுக் கூடிய செய்திகளையல்லாமலும், அரசனாகிய மகதனுடைய அரண்மனையுள் அமைந்த வானுற உயர்ந்த கன்னிமாடத்தே அவளோடு பன்முறை கூடியும் ஊடியும் கழிந்த இன்ப நினைவுகளையுடைய கட்டுரை பலவற்றையும் நினைந்து கூறிக்கூறி மகிழ்ந்து, பொன்னணிகலன்களையுடைய அப்பதுமாபதியோடு இனிய மகிழ்ச்சியை யடைந்து தனது பெரிய கோசம்பி நகரத்தின்கண் அழகிய தனது அரண்மனைக்கண் அரசுவீற்றிருந்து தன் நாட்டின்கண்ணிருந்த தீயன பலவற்றையும் அகற்றி அந்நாட்டினைத் திருமகளும் விரும்புந் தன்மையுடையதாக வளம் பலவும் பெருகச் செய்தான்; என்க.
 
(விளக்கம்) செங்கதிர்ச் செல்வன் - ஞாயிறு. எழுச்சி - தோற்றம். பாடு - மறைவு. திங்கள் - மாதம். நாள் - விண்மீன். ஞாயிறு எழுதலையும் இஃதின்ன திங்கள் இஃது இன்ன நாள் என்னும் வேற்றுமையைத் தானும் தெளியாதவனாய் இருந்தான் என்பது கருத்து. இங்ஙனமே,

  "போகப் பெருநுகம் பூட்டிய காலை,
   மாக விசும்பின் மதியமு ஞாயிறும்
   எழுதலும் படுதலும் அறியா இன்பமொடு"  (2. 9: 183-5)


என முன்னும் வந்தமை யுணர்க. இன்பக்கிழவன் : காமவேள். மகதன் : தருசகன். அவளொடு - அப்பதுமாபதியோடு. மாதரொடு - அப்பதுமாபதியோடு. பயந்த - பயன்தந்த. பாயினன் - பரப்பினான். வளமுறச் செய்தான் என்றவாறு.

2. நாடு பாயிற்று முற்றிற்று.