பக்கம் எண் :

பக்கம் எண்:566

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
           பாயநன் னாடு பைத றீர்ந்தபின்
           ஏயர் பெருமகன் சேயது நோக்கி
           விசையுடை யிரும்பிடி வீழ்ந்த தானம்
           அசைவி லாளர்க் கறியக் கூறி
 5         என்புந் தோலு முள்ளவை யெல்லாம்
           நன்கன நாடிக் கொண்டனிர் வம்மினென்
           றங்கவர்ப் போக்கிய பின்றை யப்பால்
 
        (உதயணன் பத்திராபதியின் என்பு முதலியவற்றைக்
   கொணரும்படி ஒருசிலரை விடுத்தல்)
            1 - 7 : பாய............................அப்பால்
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணமன்னனால் வளம் பெருக்கப்பட்ட நன்மையையுடைய அந்த வத்தவநாடு பகைமன்னன் ஆட்சிக்காலத்தே எய்தியிருந்த துயரமெல்லாம் அகன்று இன்புற்றிருந்த பின்னர், ஏயர் குலத்தோன்றலாகிய அவ்வுதயண மன்னன், நெடுங்காலத்திற்கு முன்னர் நிகழ்ந்ததொரு செய்தியினை நினைத்தவனாய்ச் செயலின்கண் தளர்தலில்லாத சில வினையாளரை யழைத்து அவர்களுக்குப் பண்டொரு காலத்தே வாசவதத்தையோடு தான் ஊர்ந்துவந்த பத்திராபதி என்னும் பெயருடைய விரைவுடைய அப்பெரிய பிடியானை பிணிப்பட்டு வீழ்ந்து இறந்த அவ்விடத்தின் அடையாளங்களை அவர் அறிந்துகொள்ளும்படி கூறி நீவிரெல்லாம் அங்குச் சென்று நன்றாகத் தேடி அப்பிடியானையின் என்பும்தோலும் பிறவும் ஆக ஆங்குக் கிடைப்பனவற்றையெல்லாம் கைப்பற்றிக்கொண்டு வாருங்கோள் என்று கட்டளையிட்டு அவ்விடத்திற்கு அவ்வினையாளரைப் போக்கிய பின்னர்; என்க.
 
(விளக்கம்) பைதல் - துன்பம். ஏயர் பெருமகன் : உதயணன். சேயது நோக்கி - நெடுங்காலத்திற்கு முன்பு நிகழ்ந்ததொரு செய்தியை நினைத்து. சேய்மை, ஈண்டுக் காலத்தின் மேற்று. அசைவிலாளர் - ஆள்வினையில் தளர் விலாதவர். நன்கனம் - நன்கு. அப்பால் நன்கனம் நாடி என ஒட்டுக. அப்பால் - அவ்விடத்தே.