பக்கம் எண் :

பக்கம் எண்:567

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
           வெங்கட் செய்தொழில் வேட்டுவத் தலைவரொடு
           குன்றச் சாரற் குறும்பரைக் கூஉய்
 10        அடவியுள் வீழ்ந்த கடுநடை யிரும்பிடி
           நம்மாட் டுதவிய நன்னர்க் கீண்டொரு
           கைம்மா றாற்றுத லென்று மின்மையின்
           உதவி செய்தோர்க் குதவா ராயினும்
           மறவி யின்மை மாண்புடைத் ததனாற்
 
        (பத்திராபதி வீழ்ந்த இடத்தில் அதன் வடிவச் சிற்பம் அமைத்து
அதற்குப்  பூசை முதலியவற்றை நிகழ்வித்தற்கு உதயணன் முயலுதல்)
            8 - 14: வெங்கண்............மாண்புடைத்து
 
(பொழிப்புரை) இரக்கமின்றிச் செய்யும் கொடுந் தொழிலையுடைய வேட்டுவத் தலைவர்களையும், மலையும் மலைசார்ந்த இடமும் ஆகிய குறிஞ்சி நிலத்தின்கண் வாழும் குறுநில மன்னர்களையும், வருவித்து அவர்களை நோக்கி, 'அன்புடையீர்! பண்டொரு காலத்தே காட்டினூடே யாம் ஊர்ந்து வருங்கால் பிணிப்பட்டு இறந்து வீழ்ந்த விரைந்த நடையினையுடைய பெரிய பிடியானையாகிய பத்திராபதி நமக்குச் செய்த நன்றிக்கு இவ்வுலகத்தே கைம்மாறு செய்தல் என்பது எக்காலத்தும் இயலாமையினால் செய்யாமல் செய்த உதவிக்குக் கைம்மாறு செய்யவியலாமையின் செய்யாதொழியினும் அந்நன்றியை என்றென்றும் மறவாதிருத்தலும் கைம்மாறு செய்தாற்போன்றதொரு சிறப்பினையுடைத்தாங் கண்டீர்'; என்க.
 
(விளக்கம்)   வெங்கண் - கண்ணோட்டமில்லாத கண். குறும்பர் - குறுநிலமன்னர். கூஉய் - கூவி; அழைத்து. கடுநடை - விரைந்த நடை .  நன்னர் - நன்றி. 'கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு' (குறள். 211) எனவும், 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று' (குறள். 108) எனவும், 'நன்றி மறவேல்' (ஆத்திசூடி) எனவும் வரும் சான்றோர் பொன்மொழிகளை ஈண்டு நினைக. மறவியின்மை - மறவாமை. கைம்மாறு செய்தாற் போன்றதொரு மாண்புடைத்து