பக்கம் எண் :

பக்கம் எண்:568

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
           மறவி யின்மை மாண்புடைத் ததனாற்
 15        கோடுயர் வரைப்பினோர் மாட மெடுப்பித்
           தீடமை படிவ மிரும்பிடி யளவா
           ஏற்ப வெடுப்பித் தெல்லியுங் காலையும்
           பாற்படல் பரப்பிப் பணிந்துகை கூப்பி
           வழிபா டாற்றி வழிச்செல் வோர்கட்
 20        கழிவுநன் ககல வரும்பத மூட்டாத்
           தலைநீர்ப் பெருந்தளி நலனணி கொளீஇ
           எனைவ ராயினு மினைவோர்க் கெல்லாம்
           முனைவெந் துப்பின முன்னவ ணீகென
           விருத்தி கொடுத்துத் திருத்தகு செய்தொழிற்
 
                    (இதுவுமது)
              14 - 24 : அதனால்..................கொடுத்து
 
(பொழிப்புரை) ஆதலாலே குவடு உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தின்கண்ணே ஒரு மண்டபம் எடுத்து அதன்கண் அப்பத்திராபதியின் அளவாக அதற்கீடாக அமையும் ஓர் உருவச் சிற்பத்தைப் பொருந்த எடுப்பித்து இரவும் பகலும் வழிபாட்டுப் பகுதிக்குப் பொருந்துவனவற்றை அதன்முன் பரப்பி வைத்து வணங்கிக் கைகுவித்து வழிபாடு செய்வதோடு மேலும் அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்களுக்கெல்லாம் பசிப்பிணி நன்கு அகன்று போகும்படி அரிய உணவும் ஊட்டித் தண்ணீர்ப் பந்தலும் வைத்து இங்ஙனம் யாவராயினும் வருந்தி வருவோர்க்கெல்லாம் அவரவர் விரும்பத்தக்க உணவுவகைகளை அவ்விடத்தே முற்பட வழங்குவீராக ! என்று கட்டளையிட்டு அதற்குவேண்டிய நிலங்களையும் இறையிலியாக வழங்கி; என்க.
 
(விளக்கம்) கோடு - உச்சி. மாடம் - மண்டபம். எடுப்பி - எடுத்து   ஈடு அமை படிவம் - ஈடாக அமையும் உருவம். எல்லி - இரவு. காலை - பகல். பாற்படல் - வழிபாட்டுப் பகுதிக்குப் பொருந்தும் பொருள்கள். அழிவு - பசியாலுண்டாகும் மெலிவு. அரும்பதம் - பெறற்கரிய உணவு. தலைநீர்ப்பெருந்தளி - தண்ணீர்ப்பந்தர். தளியின் நலனை அணியுறக் கொளுவி என்க. எனைவர் - யாவர். முனை - விரும்புகின்ற. வெந்துப்பு இனம் - வெவ்விய உணவுவகை. முன் - அம் மண்டபத்தின் முன். விருத்தி - இத்தகைய அறம் நிகழ்தற்பொருட்டு இறையிலியாக விடப்படும் நிலம் முதலியன