பக்கம் எண் :

பக்கம் எண்:57

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
         
     80    கற்புடை மாதரைக் கைப்படுத் தன்னதோர்
           கட்டுரை வகையிற் பட்டுரை யகற்றி
           ஆப்புடை யொழுக்க மறியக் கூறிக்
           காப்பொடு புணரிற் காணலு மெளிதெனக்
           காவல குமரற்கு மேவன வுரைத்து
     85    விடுத்தவன் போகிய பின்றை மடுத்த
 
                 (இதுவுமது)
     80 -85 ;  கற்புடை ......................பின்றை
 
(பொழிப்புரை) கற்புடைய வாசவதத்தை நல்லாளை அப்போதே
  அவன் கையில்  கொடுப்பதுபோன்ற   தனது   படைத்துமொழி
  வகையாலே தேற்றி  அவனது  இரங்கற் சொற்களையும் அகற்றி
  அந்த இரண்டு திங்கள்காறும்  அவன் மேற்கொள்ள  வேண்டிய
  கட்டுப்பாடுடைய நோன்பொழுக்கத்தையும்  அவன்  உணரும்படி
  கூறி ஐய! நீ இந்நோன்புக்குரிய  காவலோடு  பொருந்தியிருப்பின்
  நின்மனைவியைக் காண்டல் எளிதேயாம் என்றும் கூறிப் பின்னரும்
  வேந்தன் மகனாகிய உதயணகுமரனுக்குப் பொருந்தும் அறிவுரைகள்
  பலவும் கூறிவிட்டு அத்துறவி சென்றபின்னர் என்க.
 
(விளக்கம்) மாதர் - வாசவதத்தை. கட்டுரைவகை - படைத்து
  மொழிவகை. பட்டுரை - உதயணனுடைய  இரங்கற்  சொற்கள். பண்டுள்ள
  சொற்களுமாம். இதற்கு பண்டுரை - பட்டுரை ஆயிற்றென்க. ஆப்பு -
  யாப்பு - கட்டுப்பாடு. ஆப்புடையொழுக்கம் - நோன்பு. காப்பு - மனஞ்
  சென்றவாறு செல்ல விடாமற் பாதுகாத்தல். காவலகுமரன் - அரசகுமரன்;
  உதயணன். மேலன - பொருந்தும் மொழிகள். அவன்-முனிவன்.