பக்கம் எண் :

பக்கம் எண்:570

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
           விருத்தி கொடுத்துத் திருத்தகு செய்தொழிற்
  25       றச்ச மாக்களொடு தலைநின்று நடாஅம்
           அச்ச மாக்களை யடையப் போக்கிப்
           பத்திரா பதியின் படிம மிடூஉஞ்
           சித்திர காரருஞ் செல்கெனச் சொல்லி
           ஆராக் கவலையி னதுபணித் ததற்பின்
 
                   (இதுவுமது)
             24 - 29: திருத்தகு........................பின்
 
(பொழிப்புரை) அழகு தக்கிருக்கின்ற செய்தொழிலையுடைய தச்சர்களையும், அவ்விடத்தே நின்று வினையை நடத்தும் தன்பால் அச்சமுடைய பிற தொழிலாளர்களையும் நிரம்ப விடுத்துப் பின்னரும் அப்பத்திராபதியின் உருவத்தை எழுதுகின்ற ஓவியப்புலவர்களையும் செல்லுங்கோள் என்று விடுத்து முற்றாத கவலையினாலே அச்செயலைப் பணித்ததன் பின்னர்; என்க.
 
(விளக்கம்) திருத்தகு செய்தொழில் - அழகால் தகுதிபெற்ற செயலையுடைய தொழில் என்றவாறு. எனவே கலைத்தொழில் என்றாயிற்று. தச்சமாக்கள் - தச்சர். நடாஅம் - நடத்துகின்ற. அச்சமாக்கள் - தன்பால் அச்சமுடைய தொழிலாளர். அடைய - நிரம்ப. படிமம் இடூஉம் - வடிவத்தை எழுதும். ஆராக்கவலை - நுகர்ந்து முற்றாத கவலை. அது - அச்செயலை.