பக்கம் எண் :

பக்கம் எண்:571

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
         
     30      ஊரக வரைப்பி னுள்ளவை கொணர்ந்தார்க்
             கின்னுரை யமிழ்தமொடு மன்னவ னீத்துக்
             கோப்புக வமைத்த கொற்ற வாயிலும்
             யாப்புற வதன்பெயர் பாற்படக் கொளீஇ
             வாயின் முன்றி லவைப்புற மாகச்
     35      சேயுயர் மாடஞ் சித்திரத் தியற்றி
             உயிர்பெற வுருவ மிடீஇ யதனைச்
 
        ((பத்திராபதியின் என்பு முதலியன கொணர்ந்தார்க்கு உதயணன் பொருள் வழங்குதல்)
               30 - 36 : ஊரக.........இடீஇ
 
(பொழிப்புரை) முன்னர்த் தான் கட்டளையிட்டபடி பத்திராபதி வீழ்ந்த இடத்திற்குச் சென்று தேடி ஆங்குக் கிடைத்த அப்பிடியானையினது என்பு முதலியவற்றைக் கொணர்ந்து தந்நகரத்திலே தந்த அவ்வினையாளர்க்கு அவ்வுதயணமன்னவன் அமிழ்தம்போன்ற இனிய முகமன் கூறுதலோடன்றிச் சிறந்த பொருள்களையும் வழங்கிப் பின்னர் வாகைசூடிவரும் மன்னர் புகும் பொருட்டு அமைக்கப்பட்ட கொற்றவாயிலுக்குப் பொருத்த முண்டாக அப்பத்திராபதியின் பெயரை வகைப்படுத்தியிட்டு அவ்வாயிலின் முன்றிலுள்ள அம்பலத்தின் பக்கத்தே மிகவும் உயர்ந்ததொரு மாடத்தைச் சித்திரங்களோடு இயற்றி அதன்கண் பத்திராபதியின் உருவத்தை உயிருடையது போல அமைத்து; என்க.
 
(விளக்கம்) ஊரகம் - கோசம்பி நகரம். உள்ளவை - பத்திராபதியின் உறுப்புக்களுள் எஞ்சியுள்ளவை. உரையமிழ்தமொடு பொருளும் ஈத்து என்க. கோப்புக - வெற்றியுடன் வரும் அரசர்கள் புகும் பொருட்டு. கொற்றவாயில் - ஒருவகை வாயில். அதன் பெயர் பாற்படக் கொளீஇ - அப்பத்திராபதியின் பெயர்ப்பகுதியில் அவ்வாயில் வழங்கும்படி பெயரிட்டு என்றபடி. எனவே அவ்வாயிலுக்குப் பத்திராபதி வாயில் என்று பெயரிட்டு என்றாயிற்று. அவை அம்பலம். சித்திரங்களோடு இயற்றி என்க. இடீஇ - இடுவித்து.