பக்கம் எண் :

பக்கம் எண்:572

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
             உயிர்பெற வுருவ மிடீஇ யதனைச்
             செயிர்தீர் சிறப்பொடு சேர்ந்தவண் வழிபடு
             ...........................................
             நான்மறை யாளர் நன்றுண் டாகெனத்
             தாமுறை பிழையார் தலைநின் றுண்ணும்
  40         சாலையுந் தளியும் பாலமைத் தியற்றிக்
             கூத்திய ரிருக்கையுஞ் சுற்றிய தாகக்
             காப்பிய வாசனை கலந்தவை சொல்லி
             எண்ணிய துண்ணு மேண்டொழி லறாஅக்
             குழாஅ மக்களொடு திங்க டோறும்
  45         விழாஅக் கொள்கென வேண்டுவ கொடுத்துத்
             தன்னகர்க் கடப்பா டாற்றிய பின்னர்
 
                      (இதுவுமது)
                 36 - 46 : அதனை........பின்னர்
 
(பொழிப்புரை) அக்கோயிலைக் குற்றம் அறுதற்குக் காரணமான விழாவோடு சேர்ந்து அவ்விடத்தே வழிபாடு.................... நான்கு மறைகளையும் ஓதியுணர்ந்த வேதியர் நாட்டிற்கு நன்மையுண்டாகுக என்று வாழ்த்தித் தாம் தமக்குரிய ஒழுக்க முறைகளில் பிறழாமல் நின்று வந்து உண்ணுதற்குரிய அறச்சாலைகளும், தண்ணீர்ப்பந்தரும், அக்கோயிலின் பக்கத்தே இயற்றி மேலும் தளிப் பெண்டுகளின் தெருவும் அக்கோயிலைச் சுற்றியதாக இயற்றிச் சிறந்த காப்பியங்களை ஓதியும் அறங்கலந்த மொழிகளைக் கூறியும் பிறர் கருதிய கருத்துக்களைத் தம்முள் நினைந்து கூறும் நிலைபெற்ற தொழில் செய்தலும் அறாத கலைமாந்தர் குழுக்களோடு இக்கோயிலுக்குத் திங்கள்தோறும் திருவிழா எடுப்பீராக என்று அதற்கு வேண்டிய நிலமும் பொருளும் நிரம்ப வழங்கித் தன் நகரத்தின்கண் அப்பத்திராபதியின் திறத்திலே தான் செய்தற்கியன்ற கடமையைச் செய்து முடித்த பின்னர்; என்க.
 
(விளக்கம்) அதனை - அக்கோயிலை. தாமுறை பிழையார் - தாம் தமக்குரிய ஒழுக்கமுறையில் பிழையாதவர். சாலையுந்தளியும் - அடிசிற்சாலையும் தண்ணீர்ப்பந்தரும். கூத்தியரிருக்கை - தளிப்பெண்டுகளின் தெரு. காப்பிய வாசனை - காப்பியங்களைப் படித்தலோடு அறங்களைக் கலந்து அவையிடத்தே சொல்லி என்க. ஏண்தொழில் - நிலை பெற்ற தொழில். எண்ணிய துண்ணும் என்றும் பாடம். வேண்டுவ - வேண்டும் நிலம் பொருள் முதலியன.