உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
3. யாழ் பெற்றது |
|
மற்றை
யாழுங் கற்றுமுறை
பிழையான்
பண்ணுந் திறனுந் திண்ணிதிற்
சிவணி வகைநயக்
கரணத்துத் தகைநய
நவின்று
நாரத கீதக் கேள்வி
நுனித்துப்
பரந்தவெந் நூற்கும் விருந்தின
னன்றித் 60 தண்கோ
சம்பிதன் றமர்நக
ராதலிற்
கண்போற் காதலர்க் காணிய வருவோன் |
|
(இதுவுமது)
55 - 61 : மற்றை..........வருவோன் |
|
(பொழிப்புரை) ஏனைய யாழ்களையும் நன்கு கற்று அக்கல்வி
முறையில் பிழைபடானாய்ப் பண்களின் இயல்பும் திறங்களின் இயல்பும் திட்பமுறப்
பொருந்திப் பல்வேறு வகைப்பட்ட இனிய யாழ்க் கரணங்களின் அழகிய நயங்களையும்
நன்குபயின்று 'நாரத கீதம்' என்னும் நூற்கேள்வியினையும் நுணுக்கமாகக் கேட்டுணர்ந்து
பரந்துபட்ட ஏனைய எந்த இசை நூல்களுக்கும் புதியனாதலன்றி அவற்றையும் பயின்று குளிர்ந்த
கோசம்பி நகரம் தன்னுடைய சுற்றத்தார் வாழும் நகரமாதலின் ஆங்கு வாழ்கின்ற தன்
கண்ணைப் போன்று சிறந்த அன்புடைய அவ்வுறவினரைக் காணும் பொருட்டு உஞ்சை
நகரத்தினின்றும் கோசம்பி நகரத்திற்கு வருபவனும்; என்க. |
|
(விளக்கம்) மற்றையாழ் - பேரியாழ், மகரயாழ், சகோடயாழ்,
செங்கோட்டியாழ் முதலியன. முற்கூறப்பட்ட பேரியாழ் ஈண்டுக் கூறப்பட்ட பேரியாழிற்கு
வேறாகும். அதனை ஆதியாழ் என்று கூறுவர். ஆதியாழிற்கு ஆயிரம் நரம்பும், பேரியாழிற்கு
இருபத்தொன்றும் மகரயாழிற்குப் பத்தொன்பதும் சகோடயாழிற்குப் பதினான்கும்
செங்கோட்டியாழிற்கு ஏழும் என்ப. பண் - நிறைநரம்புடையது. திறன் - குறைநரம்புடையது.
கரணம் - யாழ்க்கரணம். அவை எட்டு : "பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் செலவு
விளையாட்டு, கையூழ் குறும் போக்கு" எனவரும். நாரதகீதம் - ஓரிசைநூல். ஏனைநூற்கும் -
ஏனைய எந்த இசை நூலுக்கும். விருந்தினனன்றி - புதியனாதலன்றி. தமர்நகர் - உறவினர்
வாழும் நகரம். கண்போற் காதலர் - கண்போன்ற அன்புடைய உறவினர். காணிய -
காண. |