பக்கம் எண் :

பக்கம் எண்:575

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
              சதுவகை வேதமு மறுவகை யங்கமும்
              விதியமை நெறியிற் பதினெட் டாகிய
              தான விச்சையுந் தான்றுறை போகி
  65          ஏனைக் கேள்வியு மிணைதனக் கில்லவன்
              கார்வளி முழக்கி னீர்நசைக் கெழுந்த
              யானைப் பேரினத் திடைப்பட் டயலதோர்
 
                     (இதுவுமது)
            62 - 67 : சதுவகை.............இடைப்பட்டு
 
(பொழிப்புரை) நான்குவகை வேதங்களையும் ஆறுவகை அங்கங்களையும் விதிகள் அமைந்த முறையினையுடைய பதினெட்டிடங்களையுடைய வித்தைகளையும் பயின்று முதிர்ந்து ஏனைய நூற் கேள்வியினும் தனக்கு நிகரற்றவனும் ஆகிய அவ்வருஞ்சுகன் வரும்வழியிலே நீர்வேட்டு எழுந்த முகிலும் காற்றும் போல முழங்கா நின்ற ஒரு பெரிய யானைக்கூட்டத்தினகப்பட்டுக் கொண்டு; என்க.
 
(விளக்கம்) சதுவகை - நால்வகை. துறைபோகி - கற்று முதிர்ந்து. அங்கம் - உறுப்பு நூல்கள். அவை, சிக்கை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் என்பன. விச்சை - வித்தை, வித்தைத் தானம் பதினெட்டென்பர் வடநூலார். நீர் நசைக்கு - நீர் வேட்கை காரணமாக.