உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
3. யாழ் பெற்றது |
|
கடிமிகு
கானத்துப் பிடிமிசை
வழுக்கி
வீழ்ந்த வெல்லை முதலா
வென்றும் தாழ்ந்த
தண்வளி யெறிதொறும்
போகா 85 அந்தர
மருங்கி னமரர்
கூறும்
மந்திரங் கேட்குஞ் செவிய
போலக்
கையுங் காலு மாட்டுதல்
செய்யா மெய்யொடு
மெய்யுறக் குழீஇ
மற்றவை
பிறப்புணர் பவைபோ லிறப்பவு
நிற்ப 90 ..................
வேழ
மெல்லாம்
சோர்ந்து கடுங்கதஞ் சுருங்குபு நீங்கக் |
|
(இதுவுமது) 82
- 91: கடி............நீங்க |
|
(பொழிப்புரை) பண்டு அச்சம் மிகுதற்குக் காரணமான காட்டின்
கண்ணே பத்திராபதி என்னும் பிடியின் மேனின்றும் வழுக்கி வீழ்ந்த நாள் முதலாக
என்றென்றும் தாழ்ந்த செலவினையுடைய குளிர்ந்த காற்று வீசுந்தோறும் அம்மூங்கிற்கிளை
வருடுதலால் எழாநின்ற தன்னின்னிசையைக் கேட்டு வந்து கூடுகின்ற யானைகள்
அவ்விடத்தினின்று மகலாவாய் தம்முடலோடு உடல் நெருங்கக் குழுமி வானுலகத்துத் தேவர்கள்
ஓதுகின்ற மந்திரத்தைக் கேட்கும் செவியையுடையன போலக் கேட்டுத் தம் கையுங்காலும்
ஆடுதல் செய்யாவாய்த் தம் பிறப்பிற்குக் காரணமான அவ்வின்னிசையை முற்றும் கேட்பன
போன்று அந்த யானைகள் நெடும் பொழுது தன்னைச் சூழ்ந்து
நிற்ப.........................யானைகளெல்லாம் சோர்ந்து தம்முடைய கடுஞ்சினம்
குறைந்து அவ்விடத்தினின்றும் நீங்கா நிற்ப; என்க. |
|
(விளக்கம்) யானைகள் குழீஇப் போகாவாய் மந்திரங்கேட்கும்
செவிய போலவும் பிறப்புணர்பவை போலவும் தன்னிசையைக் கேட்டு நிற்ப, அவ்
வேழமெல்லாம் பின்னர் நீங்க என இயைபு காண்க. கடி - அச்சம்; மணம் எனினுமாம். பிடி -
பத்திராபதி. எல்லை முதலா - காலமுதலாக. என்றும் - நாள் தோறும், வளி எறி தொறும் -
நரம்பு வருடப் படுதலால் எழும் இசையைக் கேட்டு; என்க. அந்தரம் - வானம். மெய்யொடு
மெய்யுறக்குழீஇ - உடலொடு உடல் பொருந்தக் கூடி. அவை - அந்த யானைகள். யானை இசையில்
தோன்றியது என்பது இசை நூற்றுணிபு இதனை. "யானை நாதத்திற் றோற்றுதலான் அதற்கு
வணங்குதலியல்பு" எனவரும் (சீவக. 748) நச்சினார்க்கினியர் நல்லுரையானும் உணர்க.
இப்பகுதியில் 91ஆம் அடியின் முற்பகுதி யழிந்தது. கடுங்கதம் - கடிய சினம். சுருங்குபு -
சுருங்கி. |