பக்கம் எண் :

பக்கம் எண்:58

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
         
     85    விடுத்தவன் போகிய பின்றை மடுத்த
           இருநிலம் புகுதலு மொருவிசும் பிவர்தலும்
           வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும்
           மந்தர மேந்தலு மென்றிவை பிறவும்
           பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக்
     90    கண்டு மறிதுங் கண்கூ டாகச்
 
           (உருமண்ணுவா முதலியோர் கூற்று)
            85 - 90 ;  மடுத்த.............கண்கூடாக
 
(பொழிப்புரை) தமது  செலவினைத்தடுத்த பெரிய நிலத்தினுட்
  புகுதலும் ஒப்பற்ற விசும்பிலே இயங்குதலும் மேலேமேலே
  வாரா நின்ற அலைகளையுடைய  நெடிய  கடனீர்முழுதும்
  வாயிலே கொண்டு பின்னர் உமிழ்தலும் மலையைக் கையி
  லேந்தலும் என்னும் இவ்வருஞ் செயல்களையும் இன்னோரன்ன
  பிறசெயல்களையும் பண்டைக்காலத்தே தோன்றிய வித்தைகளாலே
  செய்து காட்டிய மாந்தர்களைக் கேள்வியானன்றி யாம் கண்கூடாகக்
  கண்டும் அறிந்துள்ளோம்; என்க.
 
(விளக்கம்) நிலத்திற்  குளித்து  நெடுவிசும்  பேறிச் சலத்திற்
  றிரியுமோர் சாரணன்' எனவரும் மணிமேகலையும் (24; 46- 7,) காண்க.
  அகத்தியன் கடலுண்டுமிழ்ந்தமையும் நினைக. மாக்கள்- மக்கள்.