பக்கம் எண்:580
|
|
உரை | | 4. வத்தவ காண்டம் | | 3. யாழ் பெற்றது | |
கான நீந்திச் சேனை
வேந்தன்
அழுங்கலி லாவணச் செழுங்கோ
சம்பி மன்னவன்
கோயி றுன்னிய
வொருசிறை
இன்பல சுற்றமொடு நன்கனங்
கெழீஇத் 105
தண்கெழு மாலைத் தன்மனை
வரைப்பில்
இன்ப விருக்கையுள் யாழிடந்
தழீஇ
மெய்வழி வெந்நோய் நீங்கப்
பையெனச்
செவ்வழி யியக்கலிற் சேதியர் பெருமகன் | |
(இதுவுமது)
101 - 108 : கானம்...............இயக்கலின் | | (பொழிப்புரை) அக்காட்டகத்தைக் கடந்து படைப் பெருக்கமுடைய
உதயண மன்னனுடைய கேடில்லாத அங்காடித் தெருக்களையுடைய வளவிய கோசம்பி நகரத்தை எய்தி
ஆங்கு அரசனுடைய அரண்மனைக்கு அண்மையிலுள்ள ஒருபக்கத்தில் வாழா நின்ற பலராகிய இனிய
சுற்றத்தாரோடு நன்கு கூடி அளவளாவி இருந்து குளிர்ச்சி பொருந்திய அற்றை நாள் மாலைப்
பொழுதிலே தான் இருக்கின்ற இல்லத்தின்கண் ஓரிடத்தே யாழ் வாசித்தற்குரிய
இருக்கைகளுள் வைத்துத் தனக்கின்பமான ஓர் இருக்கையிலிருந்து அக்கோடவதியினை
இடப்பக்கத்தே தழுவித் தன் உடம்பின்கண் வழிநடந்த வருத்தம் நீங்குவதற்பொருட்டு
மெல்ல ''செவ்வழி'' என்னும் ஒரு சிறந்த பண்ணை அந்த யாழ் நரம்புகளை வருடி வாசித்தலாலே;
என்க. | | (விளக்கம்) கானம் - காடு. நீந்தி - கடந்து. வேந்தன் :
உதயணன். அழுங்கல் - கேடு. ஆவணம் - அங்காடி. கோயில் - அரண்மனை. ஒருசிறை -
ஒருபக்கம். பல இன்சுற்றம் என்க. தன் மனை என்றது தான் இருக்கும் இல்லம் என்றவாறு.
இருக்கை - யாழ்வாசித்தற்குரிய இருக்கை. அவை பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை,
சம்புடம், அயமுகம், சுவாத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என ஒன்பதாம்.
இன்பஇருக்கை என்றது அவ்விருக்கையுள் வைத்துத் தனக்கின்பமான ஓர் இருக்கையில்
என்றவாறு. யாழினை இடப்பக்கத்தே கொண்டு வாசிப்பது முறைமை. வழிவெந்நோய் - வழி
நடந்ததனால் உண்டான வெவ்விய வருத்தம். பையென - மெல்ல : செவ்வழி - ஒரு
பண். |
|
|