பக்கம் எண் :

பக்கம் எண்:581

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
           செவ்வழி யியக்கலிற் சேதியர் பெருமகன்
           வழிப்பெருந் தேவியொடு வான்றோய் கோயிற்
  110       பழிப்பில் பள்ளியுட் பயின்றுவிளை யாடி
           அரிச்சா லேக மகற்றின னிருந்துழி
           ஈண்டையெம் பெருமகன் வேண்டா யாகி
           மறந்தனை யெம்வயின் வலிதுநின் மனனென
           இறந்தவை கூறி யிரங்குவ தொப்பத்
  115       தொடைப்பெரும் பண்ணொலி துவைத்துச்செவிக் கிசைப்பக்
 
           (உதயணன் அவ்விசை கேட்டு ஆராய்ந்து துணிதல்)
                 108 - 115 : சேதியர்.....................இசைப்ப
 
(பொழிப்புரை) அப்பொழுது உதயணமன்னன் வானுற உயர்ந்த தன் அரண்மனையின்கண் குற்றமற்ற பள்ளி யம்பலத்திலே வழிக்கோப்பெருந்தேவியாகிய பதுமாபதியாரோடு விளையாடி மான்கட் காதலர் திறந்து இருந்தவனுக்கு அவ்வருஞ்சுகன் வாசியாநின்ற யாழொலி, "ஈண்டிருக்கின்ற எம்பெருமானே! நீ எம்மை விரும்பாமல் மறந்தனை, எம்பால் நின்மனம் மிகவும் வன்மையுடையதாயிற்று" என்று இறந்த காலத்தில் நிகழ்ந்த அவன் செயல்களை எடுத்துக் கூறி அழுவதுபோல அவன் செவியிற் படாநிற்ப; என்க.
 
(விளக்கம்) வழிப்பெருந்தேவி - இரண்டாம் கோப்பெருந்தேவி. பள்ளி - பள்ளியம்பலம். அரிச்சாலேகம் - மான்கண் போன்ற சாளரம். அரி - மான் : ஆகு பெயர். "மான்கட் காலதர் மாளிகையிடங்களும்" (சிலப், 5 : 8.) இறந்தவை - இறந்தகால நிகழ்ச்சிகள். தொடை - யாழ்.