பக்கம் எண் :

பக்கம் எண்:583

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
         
    120    மருங்கறைக் கிடந்த வயந்தக குமரன்
          விரைந்தனன் புக்கு நிகழ்ந்ததை யென்னெனக்
          கூட்டமை வனப்பிற் கோட பதிக்குரல்
          கேட்டனன் யானுங் கேண்மதி நீயும்
          விரைந்தனை சென்றுநம் மரும்பெறற் பேரியாழ்
    125    இயக்கு மொருவனை யிவட்டர னீயென
 
                      (இதுவுமது)
             120 - 125 : மருங்கு....................என
 
(பொழிப்புரை) அப்பொழுது பக்கத்தேயுள்ள அறையில் பள்ளி கொண்டிருந்த வயந்தககுமரன் எழுந்து விரைந்து வந்து உதயணன் அறையில் புகுந்து, "பெருமானே ! இப்பொழுது இங்கு நிகழ்ந்தது யாது?" என்று வினவாநிற்ப, அவனைக்கண்ட உதயணன், "நண்ப! இங்கு இசைக்கும் இந்த யாழிசையைக் கேள். இவ்விசை பல்வகை உறுப்புக்களும் சேர்ந்தமைந்த அழகினையுடைய நமது கோடவதியின் இன்னிசையே காண். யான் அதனைக் கேட்டு நன்கு அறிந்து கொண்டேன். நீயும் கேட்டு அறிந்துகொள்! நீ இப்பொழுதே விரைந்து சென்று நமது அரும் பெறல் பேரியாழினை இயக்குபவனை இங்கு அழைத்து வருவாயாக" என்று கூற; என்க.
 
(விளக்கம்) உதயணன் மெய்காப்பாளன் எங்குளன் என்று ஆங்குள்ள பணியாளரை வினவி ஆராயும் அரவங்கேட்டு வயந்தகன் விரைந்து வந்து இங்கு நிகழ்ந்தது என்ன என்று வினவுகின்றான் என்பது கருத்து. மருங்கறை - பக்கத்தேயுள்ள அறை. கூட்டமை - பலவகை உறுப்புக்களும் சேர்தலமைந்த. வனப்பு - அழகு. கேண்மதி - மதி : முன்னிலையசை.  இயக்கு மொருவனை என்றது இயக்குபவனை என்றவாறு. தரல் - அழைத்து வருக.