பக்கம் எண் :

பக்கம் எண்:584

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
          மயக்கமில் கேள்வி வயந்தக னிழிந்து
          புதிதின் வந்த புரிநூ லாளன்
          எதிர்மனை வரைப்பக மியைந்தனன் புக்கு
          வீறமை வீணைப் பேறவன் வினாவ
  130      நருமதை கடந்தோர் பெருமலைச் சாரற்
          பெற்ற வண்ண மற்றவ னுரைப்பக்
          கொற்றவன் றலைத்தாட் கொண்டவன் குறுகி
          வேற்றோன் பதிநின் றாற்றலிற் போந்த
         அன்றை நள்ளிரு ளரும்பிடி முறுகக்
  135      குன்றகச் சாரற் றென்றிசை வீழ்ந்த
          பேரியா ழிதுவெனப் பெருமகற் குரைப்பத்
 
                   (வயந்தகன் செயல்)
            126 - 136 : மயக்கம்............உரைப்ப
 
(பொழிப்புரை) மயக்கற்ற நூற்கேள்வியையுடைய அவ்வயந்தக குமரன் அம்மாளிகையினின்றும் இறங்கிப் புதுவோனாக அந்நகரத்திற்கு வந்த அவ்வருஞ்சுகன் இருந்த எதிரில்லத்தின்கட் சென்றுபுகுந்து வீறுடைய அவ்வீணையை அப்பார்ப்பனன் பெற்ற வரலாற்றினை அவனையே வினவ அதுகேட்ட அவ்வருஞ்சுகன் அந்த யாழினைத் தான் நருமதைப் பேரியாற்றைக் கடந்து இப்பால் வருகின்ற வழியிலே பெரிய மலைச்சாரலின்கண் கண்டு எடுத்துக்கொண்டு வந்த செய்தியைக் கூறாநிற்ப, அதுகேட்ட வயந்தகன் அப்பார்ப்பனனை அழைத்துக்கொண்டு உதயணன்பாற்சென்று, "வேந்தே! இந்த யாழ் பண்டு யாம் பிரச்சோதனனுடைய உஞ்சை நகரத்தினின்றும் நமது ஆற்றலாலே வந்த அற்றை நள்ளிரவின்கண் யாமூர்ந்துவந்த பெரிய பிடியானையாகிய பத்திராபதி பெரிதும் விரைந்து ஓடினமையால் மலைச்சாரலிலே அப்பிடியின் மேலிருந்து தென்பக்கத்தில் நழுவிவிழுந்த அக்கோடவதியே" என்று அந்த யாழினை உதயணனுக்குக் காட்டிக் கூறா நிற்ப; என்க.
 
(விளக்கம்) இழிந்து - இறங்கி. புரிநூலாளன் - பார்ப்பனனாகிய அருஞ்சுகன். வீறு - வேறொன்றற் கில்லாத அழகு. வீணைப்பேறு - அவ்வீணையைப் பெற்ற வரலாறு. பெற்றவண்ணம் - பெற்ற வரலாறு. கொற்றவன் : உதயணன். தலைத்தாள் : முன்னிலை. வேற்றான் - பிரச்சோதனன். பதி - உஞ்சை நகரம். பிடி - பத்திராபதி. முறுக - விரைய. பெருமகற்கு : உதயணனுக்கு.