பக்கம் எண் :

பக்கம் எண்:585

உரை
 
4. வத்தவ காண்டம்
 
3. யாழ் பெற்றது
 
           தாரார் மார்பன் றாங்கா வுவகையன்
           வருகவெ னல்லியாழ் வத்தவ னமுதம்
           தருகவென் றனித்துணை தந்தோய் நீயிவண்
  140      வேண்டுவ துரையென் றாண்டவன் வேண்டும்
          அருங்கல வெறுக்கையொடு பெரும்பதி நல்கி
          அந்நக ரிருக்கப் பெறாஅய் நீயெனத்
           தன்னக ரகத்தே தக்கவை நல்கி
           உலவா விருப்பொடு புலர்தலை காறும்
  145       உள்ளியு முருகியும் புல்லியும் புணர்ந்தும்
           பள்ளிகொண் டனனாற் பாவையை நினைந்தென்.
 
                 (உதயணன் செயல்)
           137 - 146 : தாரார்..............நினைந்தென்
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் ஆற்றொணாத மகிழ்ச்சி யுடையனாய் "வருக! வருக! என் நல்ல யாழ் வருக! வத்தவன் அமுதம் வருக! அந்தணனே! அதனை என்பால் தருக! ஒப்பற்ற எனது துணையாகிய இக்கோடவதியினை எனக்கு மீண்டும் கொணர்ந்து தந்த அந்தணனே! நீ இவ்விடத்தே விரும்பும் பொருள்களையெல்லாம் சொல்லுக! யாம் அவற்றைத் தருவேம்!" என்று கூறி அவ்விடத்தே அப்பார்ப்பனன் வேண்டாநின்ற பெறுதற்கரிய பேரணிகலன்களோடு நிதிபலவும் பெரிய ஊரும் வழங்கி, "அருஞ்சுகனே! நீ இப்பொழுதிருந்த அந்தச் சிறிய வீட்டில் இருத்தல் வேண்டா!" என்று கூறித் தன் அரண்மனையின் அகத்தே தகுந்த இல்லங்கள் சிலவற்றை அவனுக்கு வழங்கிய பின்னர்த் தான்பெற்ற அக் கோடவதியின்பால் குறையாத விருப்பத்தோடு அற்றை இரவு விடியுந்துணையும் அக்கோடவதியினை நினைந்தும் நெஞ்ச முருகியும் தழுவிக் கொண்டும் அதன் இசையொடு மனம் புணர்ந்தும் அக்கோடவதி வாயிலாக வாசவதத்தையை நினைந்து வருந்தியும் பாயலில் உறங்காமற் கிடந்தனன்; என்க.
 
(விளக்கம்) தார் - மாலை. மார்பன் : உதயணன், வத்தவன் அமுதம் என்றது, தன்னைப் பிறன் போற் கூறியபடியாம். ஆண்டு - அவ்விடத்தே. அவன் : அவ்வருஞ்சுகன். அருங்கலன்களை வெறுக்கையொடு நல்கிப் பெரும்பதிநல்கி என முன்னும் ஒட்டுக. பெரும்பதி - பெரிய ஊர். அந்நகர் - அவ்வுஞ்சை நகரம் எனினுமாம். தன்நகர் - தன்னுடைய கோசம்பி நகரம் எனினுமாம். புலர்தலைகாறும் - விடியுமளவும். பள்ளி கொண்டனனால் என்றது உறங்காமல் பாயலிற்கிடந்தான் என்பதுபட நின்றது. பாவை : வாசவதத்தை. பாவையை நினைந்து என்றது, அக் கோடவதிவாயிலாகப் பாவையை நினைந்து என்பதுபட நின்றது.