பக்கம் எண் :

பக்கம் எண்:586

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
           பள்ளி யெய்திய நள்ளிரு ணீங்கலும்
           விளியா விருப்பினொ டொளிபெறப் புதுக்கி
           மாசில் கற்பின் மருந்தேர் கிளவி
           வாசவ தத்தையை வாய்மிக் கரற்றி
     5     எனக்கணங் காகி நின்றநீ பயிற்றிய
           வனப்பமை வீணை வந்தது வாராய்
           நீயே யென்வயி னினைந்திலை யோவென
 
                  (உதயணன் நிலை)
                 1 - 7 : பள்ளி........என
 
(பொழிப்புரை) இவ்வாறு கோடவதி வாயிலாய் வாசவதத்தையை நினைந்து வருந்தி உறங்காமல் பாயலிற் கிடந்த அந் நள்ளிருள் நீங்குதலும், அம்மன்னவன் கோடவதியை நோக்கி 'என் தெய்வ யாழே !' என்று அதனை விளித்து ஆர்வத்தோடே அதனை மீண்டும் ஒளிபெறுமாறு புதுக்கியவனாய்க் குற்றமற்ற கற்புடைய அமிழ்தத்தையொத்த மொழியினையுடைய வாசவதத்தையை நினைந்து வாயால் மிகவும் புலம்பி, 'வாசவதத்தாய்! எனக்குக் கண்கண்ட தெய்வமேயாகி நின்ற நீ வருடிய அழகமைந்த தெய்வயாழ் என்பால் மீட்டும் வந்தது. அன்புடைய நீயோ வந்தாயில்லை. என்னை நினைந்திலையோ,' என்று புலம்பி; என்க.
 
(விளக்கம்) விளியா விருப்பினொடு - பண்ணிசைக்கும் விருப்பத்தோடு எனினுமாம். விளியா - விளிக்கும்; பண்ணிசைக்கும் என்றவாறு. மருந்து: அமிழ்தம். ஏர்: உவம உருபு. கிளவி - மொழி. வாய்மிக்கு - வாய்விட்டு. அணங்காகிநின்ற நீ - தெய்வமாகி நின்ற நீ. என்னால் இழக்கப்பட்ட வீணை வந்தது: என்னால் இழக்கப்பட்ட நீ இன்னும் வந்திலை என்றவாறு.