பக்கம் எண் :

பக்கம் எண்:589

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
         
     20   பகைகொண் மன்னர் மிகவுவந் தொன்றி
          இழிந்த மாக்களொ டின்ப மார்தலின்
          உயர்ந்த மாக்களொ டுறுபகை யினிதென
          மகிழ்ந்த நெஞ்சமொடு மன்னவற் புகழ்ந்து
          செயப்படு கருமஞ் செறியச் செய்ய
     25   மயக்கமி லமைச்சனை மன்னர் விட்டபின்
 
        (சங்கமன்னர் உருமண்ணுவாவைச் சிறைவிடுத்தல்)
                20 - 25 : பகை.............பின்
 
(பொழிப்புரை) அத்தூதுவர் மொழிகேட்ட பகைமன்னராகிய விரிசிகன் முதலியோர் மிகமிக மகிழ்ந்து அத்தருசக மன்னன் கருத்தோடியைந்து கீழ்மக்களோடு கூடி இன்பமெய்துதலினும் காட்டில் மேன்மக்களோடு மிக்க பகைகோடல் இனிதாங்கண்டீர் என்று மகிழ்ந்த நெஞ்சத்தோடு அத்தருசக மன்னன் பண்பினைப் பாராட்டிப் புகழ்ந்து மேலே செய்தற்குரிய செயல்களைச் செறிவுறச் செய்யும்பொருட்டு மயக்கமில்லாத அறிவுடை அமைச்சனாகிய உருமண்ணுவாவை அச்சங்கமன்னர் சிறைவீடு செய்துவிட்ட பின்னர்; என்க.
 
(விளக்கம்) பகைகொள் மன்னர் - விரிசிகன் முதலிய சங்கமன்னர் எண்மரும். ஒன்றி - தம்முட் கூடி எனினுமாம். 'இழிந்த மாக்களொடின்ப மார்தலின் உயர்ந்த மாக்களொ டுறுபகை இனிது' என்னும் இத்தொடரொடு.

  'பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
   ரேதின்மை கோடி யுறும்'  (குறள். 816)

எனவும்.

  'நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
   பத்தடுத்த கோடி யுறும்'   (குறள். 817)

எனவும்.

  'இசைந்த சிறுமை இயல்பிலா தார்கட்
   பசைந்த துணையும் பரிவாம்--அசைந்த
   நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கட்
   பகையேயும் பாடு பெறும்'  (நாலடி. 187)

எனவும் வரும் ஆன்றோர் பொன்மொழிகளையும் நினைக. மன்னவற் புகழ்ந்து - தருசகனைப் புகழ்ந்து. மன்னர் : அச்சங்க மன்னர்.