பக்கம் எண் :

பக்கம் எண்:59

உரை
 
3. மகத காண்டம்
 
4. புறத்தொடுங்கியது
 
           செத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு புணர்ந்தோர்க்
           கேட்டு மறியலம் வீட்டருஞ் சிறப்பிற்
           புண்ணிய முடைமையி னண்ணின னாமிவன்
           ஒருதலை யாகத் தருதல் வாயென
     95    உறுதி வேண்டி யுருமண் ணுவாவும்
           மருவிய தோழரு மன்னனைத் தேற்றி
 
                 (இதுவுமது)
         91 - 96 : செத்தோர்.............தேற்றி
 
(பொழிப்புரை) இறந்தோரை மீட்டுத் தருகின்ற வித்தையை
  யுடையோரை யாம் கேட்டும் அறிந்திலேம். நீங்குதலில்லாத
  சிறப்பினையுடைய புண்ணிய மிகுதியாலே இம்முனிவன்
  இவ்வித்தையை அடைந்தான் ஆதல் வேண்டும், இவன்
  வாசவதத்தையைப் பழைய வடிவத்தோடு ஒரு தலையாக
  மீட்டுத் தருதல் வாய்மையேயாகும் ; ஐயமின்று என்றுகூறி
  மேல்வரும் உறுதியை விரும்பி உருமண்ணுவாவும் ஏனைத்
  தோழரும் உதயணனைத் தேற்றி யென்க.
 
(விளக்கம்) வீட்டரும் சிறப்பு - விடுதல் இல்லாத சிறப்பு.
  அருமை-ஈண்டின்மை மேற்று. இவன் புண்ணியமுடைமையின்
  நண்ணினன் ஆம் என்க. நண்ணினன் - எய்தினன். உறுதி -
  ஆக்கம். மன்னன் - உதயணன்.