பக்கம் எண் :

பக்கம் எண்:590

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
           திருவலக் கருமந் திண்ணிதிற் செய்துவந்
           துருமண் ணுவாவுந் தருசகற் கண்டு
           சிறைநனி யிருந்த சித்திராங் கதனைப்
           பொறைமலி வெந்நோய் புறந்தந் தோம்பிப்
     30    போக்கிய பின்றை வீக்கங் குன்றாத்
           தலைப்பெருந் தானைத் தம்மிறைக் கியன்ற
           நிலைப்பா டெல்லா நெஞ்சுணக் கேட்டு
           வரம்பி லுவகையொ டிருந்த பொழுதின
 
             (உருமண்ணுவாவின் செயல்)
           26 - 33 : திருவலக்................பொழுதின்
 
(பொழிப்புரை) இங்ஙனம் சங்கமன்னரால் சிறைவீடுபெற்ற அவ்வுருமண்ணுவா தன் மன்னனுக்குச் செல்வமும் ஆற்றலும் தருதற்குரிய செயல்களை அப்பகை மன்னர்பால் திட்பமுறச் செய்து அங்கிருந்து இராசகிரிய நகரத்திற்கு வந்து தருசக மன்னனையுங் கண்டு அந்நகரத்தில் நன்கு சிறைவைக்கப்பட்டிருந்த சித்திராங்கதன் என்னும் எலிச்செவியரசன் தம்பியை அவனுடைய பொறை மிக்க வெவ்விய நோய்களையும் தீர்த்து நன்கு பேணி அப்பகை மன்னர்பால் போக்கிய பின்னர்ப் பெருமை குறையாத தலைமைத்தன்மையையுடைய பெரிய படைகளையுடைய தம்மரசனாகிய உதயணனுக்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நெஞ்சு கவரும்படி கேட்டுணர்ந்து எல்லையற்ற மகிழ்ச்சியோடே அவ்வமைச்சன் இராசகிரிய நகரத்தே இருந்தபொழுது; என்க.
 
(விளக்கம்) திருவும் வலமும் தரும் கருமம் என்க. திரு - செல்வம். வலம் - ஆற்றல். இவற்றை உதயணனுக்குத் தரும் செயல்களை என்றவாறு. எனவே உருமண்ணுவா சிறைவீடு பெற்றதும் அச்சங்கமன்னரை உதயணனுக்கு நட்பாக்கும் செயல்களைச் செய்துவந்தனன் என்றார் ஆயிற்று. சித்திராங்கதன் - எலிச்செவியரசன் தம்பி. அவன் சிறையிருக்குங்கால் பொறை மிகுதலால் உண்டாகும் வெந்நோய் என்றவாறு. வீக்கம் - பெருமை. தம்மிறை : உதயணன். அவனுக்கியன்ற நிலைப்பாடு என்றது, பகைவனைக் கொன்று கொற்றங் கொண்டதனை.