பக்கம் எண் :

பக்கம் எண்:591

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
           இயைந்த நண்பி னியூகியோ டிருந்த
     35    பயன்றெரி சூழ்ச்சிப் பதின்ம ரிளையருட்
           டீதில் கேள்விச் சாதக னென்போன்
           உருமண் ணுவாவும் யூகியுந் தறியாக்
           கரும மேற்கோ டெரிநூ லாகப்
           பாவிடு குழலி னாயிடைத் திரிதர
 
               (சாதகன் செயல்)
           34 - 39 : இயைந்த............திரிதர
 
(பொழிப்புரை) இனி, யூகி என்னும் அமைச்சனோடு மனம் பொருந்திய நட்புரிமையோடு தங்கி இருந்த பயன் தெரிதற்குக் காரணமான ஆராய்ச்சியினையுடைய இளைஞர் பதின்மருள் வைத்துக் குற்றமற்ற நூற்கேள்வியையுடைய சாதகன் என்னும் இளைஞன் உருமண்ணுவா என்னும் அமைச்சனும் யூகி என்னும் அமைச்சனும் நெய்வோர் தம்மிருபாலும் அமைத்துக்கொண்ட தறி ஆகவும் தான் தன்னுள் அடக்கியிருக்கின்ற ஆள்வினைக் கொள்கையே ஆராய்ந்தமைத்த நூலாகவும் தான் அந்நூற்பாவிலிட்ட குழலாகவும் அவ்விரு அமைச்சர்பாலும் சென்றும் வந்தும் திரிதலைச் செய்ய; என்க.
 
(விளக்கம்) இதன்கண் மறைந்திருந்த யூகியின் மொழியைக் கொண்டு உருமண்ணுவாவினிடமும் உருமண்ணுவா கூறும் மொழியைக் கொண்டு யூகியினிடமும் பன்முறை தூது செல்லுந் தொழிலைச் சாதகன் என்னும் இளையன் செய்து வந்தனன் என்பதுணர்த்தப்பட்டது. இதன்கண் இரு மருங்குமுள்ள யூகியும் உருமண்ணுவாவும் இருமருங்குமுள்ள தறிகளாகவும் அவர்பால் சாதகன் கேட்டுக் கொண்ட மொழி நூலாகவும் அச்சாதகனே நூலை உட்கொண்டு அங்குமிங்கும் ஓடா நின்ற குழலாகவும் கூறி இருக்கும் உவமை நயம் நினைந்து நினைந்து இன்புறற்பாலது. இப்பகுதியால் யூகியோடு ஏவலிளைஞர் ஒருபதின்மர் இருந்தனர் என்பதும் பெற்றாம்.