பக்கம் எண் :

பக்கம் எண்:592

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
         
     40    முனிவில னாதலின் முன்னா ளெண்ணிய
           செய்வினை முடித னோக்கித் தேவியைக்
           கைவயிற் கொடுத்தல் கரும மென்றுதன்
           அருமறை யோலை யரும்பொறி யொற்றி
           உருமண் ணுவாவினைக் கண்டிது காட்டென
 
        (யூகி சாதகனை உருமண்ணுவாவிடம் விடுத்தல்)
             40 - 44 : முனிவு............காட்டென
 
(பொழிப்புரை) யூகி இப்பொழுது உதயணமன்னன் இன்பத்திலே அழுந்தி அரசாட்சியின்கண் வெறுப்புடையன் ஆகாமையினாலும் முன்காலத்தே தாம் எண்ணிய கருமம் இப்பொழுது நிறைவேறிவிட்டமையை நினைத்தும் யாம் இப்பொழுது கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையை அவன்பால் ஒப்புவித்து விடுதலே தான் செய்தற்குரிய செயல் என்று கருதி அரிய மறைச் செய்தியாகிய இச்செய்தியை ஓரோலையின்கண் வரைந்து பிறர் அறிதற்கரிய தனது இலச்சினையையிட்டு அச்சாதகன் பாற் கொடுத்து "இளைஞனே ! நீ இவ்வோலையைக் கொண்டு சென்று உருமண்ணுவாவினைக் கண்டு காட்டுக" என்று கூறி விடுத்தலாலே என்க.
 
(விளக்கம்) யூகி பண்டு உதயணமன்னன் இன்ப நுகர்ச்சியில் அழுந்தி ஆட்சியை வெறுத்தான் ஆதலின் அந்நிலையை மாற்றி அவனை அத்தொழிலில் ஈடுபடுத்தற் பொருட்டே வாசவதத்தையை அவன்பானின்றும் பிரித்தனன். இற்றைநாள் அவன் ஆட்சித்தொழிலில் வெறுப்பின்றி ஈடுபட்டிருக்கின்றனன். ஆதலால் இப்பொழுது வாசவதத்தையை அவனொடு கூட்டி விடுதலே நற்செயல் என்று யூகி கருதுகின்றான் என்றவாறு. முனிவிலன் என்றது. பண்டுபோல ஆட்சித் தொழிலில் வெறுப்பிலன் என்றவாறு. முன்னாள் எண்ணிய செய்வினை முடிதல் என்றது, உதயணன் ஆருணியைக் கொன்று கொற்றங் கொண்டதனை. அருமறையோலை - பிறர் அறிதற்கரிய மறைச் செய்தி வரைந்த ஓலை. பொறி - இலச்சினை; முத்திரை. காட்டென்று சாதகனுக்குக் கூறிவிடுக்க என்க.