பக்கம் எண் :

பக்கம் எண்:593

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
         
     45    விரைவனன் போந்து தருசகன் காக்கும்
           இஞ்சி யோங்கிய விராச கிரியத்து
           வெஞ்சின வேந்தன் கோயின்முற் றத்துக்
           குஞ்சரத் தானத்து நின்றோற் குறுகிக்
           குறியிற் பயிர்ந்து மறையிற் போகி
     50    ஓலை காட்ட வுள்ளம் புகன்று
 
               (சாதகன் செயல்)
          45 - 50: விரைவனன்............காட்ட
 
(பொழிப்புரை) அத்தூதோலை பெற்ற சாதகன் விரைந்து சென்று தருசக மன்னனால் பாதுகாக்கப்படுகின்ற உயரிய மதில்களையுடைய இராசகிரிய நகரத்திற் புகுந்து வெவ்விய வெகுளியையுடைய அத்தருசக மன்னன் அரண்மனை முற்றத்தின்கண் யானைச் செண்டு வெளியிலே நின்ற அவ்வுருமண்ணுவாவைக் கண்டு அணுகிச் சங்கேத ஒலியால் பிறர் அறியாமல் அவனை அழைத்துக் கொண்டு மறைவிடத்தே சென்று அவ்வோலையைக் காட்டா நிற்ப; என்க.
 
(விளக்கம்) விரைவனன் : முற்றெச்சம். இஞ்சி - மதில். வேந்தன்: தருசகன். கோயில் - அரண்மனை. குஞ்சரத்தானம் - யானைச் செண்டு வெளி. நின்றோன்: உருமண்ணுவா. குறியில் - சங்கேத ஒலியால். பயிர்ந்து - அழைத்து. மறையில் - மறைவிடத்தே.