பக்கம் எண் :

பக்கம் எண்:595

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
         
     55    அற்பழ லூர்தர வடல்வே லுதயணன்
           ஒற்கம் படாமை யுணர்ந்தன மாகி
           அரும்பெறற் றோழி யாற்றும் வகையிற்
           பெருந்தண் கானம் பிற்படப் போகிப்
           பற்றின் மாதவர் பள்ளியு ளிருப்பின்
     60    அற்றந் தருமென வதுநனி வலீஇத்
 
                 (சாதகன் கூற்று)
             55 - 60: அற்பழல்..........வலீஇ
 
(பொழிப்புரை) "பெருமானே! நம் சூழ்ச்சியால் கோப்பெருந்தேவியாரை யாங்கள் அரண்மனையினின்றும் பிரித்துக் கொடு போய பின்னர்க் காட்டினின்றும் அரண்மனைக்கு வந்த வெற்றி வேலையுடைய உதயணமன்னன் வாசவதத்தை இறந்தாள் என்று கருதிய பின்னரும் அவன் அன்புத்தீ மிகுதலாலே இறந்துபடாமல் ஒருவாறு உய்ந்திருந்தமையை அறிந்துகொண்ட பின்னர்ப் பெறற்கரிய அம்மன்னன் தோழியாகிய அவ்வாசவதத்தை ஆற்றி எம்மோடு வருதற்குரிய ஒரு முறைமையினாலே பெரிய குளிர்ந்த காட்டினூடே அப்பெருமாட்டியோடு சென்று அக்காட்டையுங் கடந்து அப்பாற் சென்று ஆங்குப் பற்றற்ற துறவோர் உறையா நின்ற பள்ளியுள் சின்னாள் இருந்தேமாக; துறவோர் பலரும் வந்துபோகும் அப்பள்ளியுள் யாங்கள் நெடிதிருப்பின் எங்கள் மறை வெளிப்பட்டு எமக்குப் பெரிதும் சோர்வுண்டாக்கும் என்னும் உண்மையை நன்கு நினைந்து' என்க.
 
(விளக்கம்) அற்பழல் - அன்பாகிய நெருப்பு. ஒற்கம் - தளர்ச்சி. ஈண்டுச் சாதகன் மேனின்றது. உதயணன் நிலைமையை அறியுந் துணையும் யாங்கள் அங்கேயே கரந்துறைந்தேம் என்றானுமாயிற்று. தோழி - உதயணன் தோழி என்றது வாசவதத்தையை. வாசவதத்தை ஆற்றும் வகையில் குளிர்ந்த கானத்தினூடே சென்று என்றவாறு. பற்று - யான் எனது என்னும் இருவகைப் பற்றும். அற்றம் - சோர்வு. அஃதாவது மறைவெளிப்படல். வலீஇ - வலிந்து; நினைந்து.