உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
4. உருமண்ணுவா வந்தது |
|
தண்புனற்
படப்பைச் சண்பைப் பெரும்பதி
மித்திர காம னற்பெருங்
கிழத்தியொ
டாப்புற விரீஇய பிற்றை
யாருணி
காப்புறு நகர்வயிற் கரந்துசென்
றொழுகும் 65 கழிபெரு நண்பிற்
காள மயிடனென்
றழிவி லந்தண னவ்விடத்
துண்மையிற்
புறப்படு மிதுவெனத் திறப்படத் தெரிந்து
|
|
(இதுவுமது) 61 - 67:
தண்..........தெரிந்து
|
|
(பொழிப்புரை) அவ்விடத்தினின்றும் சென்று நல்ல நீரையும் தோட்டங்களையும் உடைய ''சண்பை'' என்னும்
பெரிய நகரத்தின்கண் உள்ள ''மித்திரகாமன்'' என்னும் வணிகனுடைய பெருமனைக்
கிழத்தியோடு நங்கோப்பெருந்தேவி வாசவதத்தையார் கேண்மை கொள்ளும்படி
அம்மனையின்கண் இருத்திய பின்னர், ஆருணிமன்னன் காத்தலையுடைய கோசம்பி
நகரத்தின்கண் மாறுவேடங் கொண்டு சென்று ஒழுகுபவனும் அம்மன்னனோடு மிகப் பெரிய
நட்புரிமையுடையவனும் ''காளமயிடன்'' என்னும் பெயரையுடையவனும் செயலின்கண் மனத் தளர்ச்சி
இல்லாதவனும் ஆகிய ஓர் அந்தணன் அச்சண்பை நகரத்தில் இருந்தமையால் யாங்கள்
கரந்துறைகின்ற இச்செய்தி வெளிப்பட்டுவிடும் என்று நன்கு தெரிந்து கொண்டு;
என்க.
|
|
(விளக்கம்) படப்பை - தோட்டம். சண்பைப் பெரும்பதி -
சண்பை மாநகரம். மித்திரகாமனுடைய நல்ல பெரிய மனைக்கிழத்தி என்க. ஆப்புற யாப்புற
கேண்மையுற. இரீஇயபிற்றை - இருத்திய பின்னர். ஆருணிகாப்புறு நகர் என்றது, கோசம்பியை.
காளமயிடன் என்னும் பெயரையுடைய ஆருணியின் ஒற்றனொருவன் அச்சண்பையில் இருந்ததனால்
யாங்கள் மறைவெளிப்படும் என்று தெரிந்து கொண்டோம் என்றவாறு. ஆருணியோடு
நண்பினையுடைய காளமயிடன் என்க. செயலின்கண் அழிவில்லாத அந்தணன் என்க. இது -
கரந்துறையும் இச்செய்தி.
|