பக்கம் எண் :

பக்கம் எண்:598

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
           இருந்த பொழுதி லிப்பா லரசற்கு
           நிகழ்ந்ததை யெல்லா நெறிமையிற் கேட்டுப்
     80    பொன்னிழை மாதரைப் புணர்த்தல் வேண்டும்
           இன்னே வருகென நின்னுழைப் பெயர்த்தந்
           தாங்கவ ரிருந்தன ராதலி னீங்கினிச்
           செய்வதை யெல்லா மெய்பெற நாடெனத்
           தூதுசெல் லொழுக்கிற் சாதக னுரைப்ப
 
                   (இதுவுமது)
           78 - 84 : இப்பால்.............உரைப்ப
 
(பொழிப்புரை) 'பெருமானே ! இங்கு நம்மரசனுக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியையெல்லாம் முறையாகக் கேட்டுணர்ந்து இனிப் பொன்னணிகலன் அணிந்த நங்கோப் பெருந்தேவியாரை நங்கோ மகனோடு கூட்டுதல் வேண்டும். அதன் பொருட்டு நின்னை இப்பொழுதே அழைத்து வருக என்று நின்னிடத்தே என்னை விட்டு அம்மலையரணிடத்தேயே அத்தேவி முதலியோர் இருக்கின்றனர்; ஆதலால் இவ்விடத்தே நீ செய்தற்குரிய செயல்களையெல்லாம் உருப்பெற ஆராய்வாயாக' என்று தூது சொல்லுகின்ற முறைமைப்படி அச்சாதகன் உருமண்ணுவாவுக்குக் கூறா நிற்ப; என்க.
 
(விளக்கம்) அரசற்கு : உதயணனுக்கு. நெறிமை - முறைமை. மாதரை - வாசவதத்தையை. இன்னே - இப்பொழுதே. பெயர்த்தந்து - விட்டு. அவர் : வாசவதத்தை முதலியோர். மெய்பெற - உருப்பெற.