பக்கம் எண் :

பக்கம் எண்:600

உரை
 
4. வத்தவ காண்டம்
 
4. உருமண்ணுவா வந்தது
 
         
     90    அப்பா னின்று முற்பால் விருந்தாய்ப்
           புண்டர நகரம் புகுந்தன னிருந்த
           மண்டமர்க் கடந்தோன் விரைந்தனன் வருகென
           எதிர்வரு தூதனொ டதிரக் கூடிச்
           சத்தி யூதி முதலாச் சண்பையுள்
     95    மித்திர காமனைக் கண்டுமெலி வோம்பி
           வருத்தந் தீர்ந்தபின் வருத்த மானன்
 
                  (இதுவுமது)
            90 - 96: அப்பால்............பின்
 
(பொழிப்புரை) வருத்தமானனுடைய மலையரணின் நின்றும் அவ் வருத்தமானனுடைய முற்பட்ட புண்டர நகரத்தே அவனுடைய விருந்தாகி வாசவதத்தை முதலியோரோடு புகுந்து இருந்த பகைவர், மண்டிய போரினை வென்று கடந்த யூகி விரைந்து வருவானாக என்று சொல்லி விடுத்தமையால் தன் எதிரே வந்த தூதனாகிய அச்சாதகனொடு நெஞ்சதிரும்படி கூடி அச்சத்தியூதியை முன்னிட்டுச் சண்பைமா நகரத்தினூடே சென்று ஆண்டு மித்திரகாமன் என்னும் செட்டிமகனைக் கண்டு அளவளாவி அவன் மனையிலே தனது வழி நடை வருத்தத்தைப் பரிகரித்துக்கொண்டு அவ்வருத்தம் தீர்ந்த பின்னர்; என்க.
 
(விளக்கம்) அப்பால் - அந்த மலையரணினின்றும் என்க. முற்பால் புண்டர நகரம் - முன்னிருந்த பகுதியையுடைய புண்டர நகரம் என்க. வருத்தமானனுக்கு விருந்தாய்ப் புகுந்து என்க. அமர்க்கடந்தோன் என்றது யூகியை. எதிர்வருதூதன் - தூதனைக் காண்டலும் என் நிகழ்ந்தது என்று நெஞ்சு விதுப்புறுதலால் தூதனொடு அதிரக் கூடி என்றார். வழிநடை வருத்தந் தீர்ந்த பின்னர் என்க.