பக்கம் எண் :

பக்கம் எண்:635

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
         பொலிவுடை நகர்வயிற் புகலருங் கோயிலுள்
         வலிகெழு நோன்றாள் வத்தவர் பெருமகன்
         புதுமணக் காரிகை பூங்குழை மாதர்
         பதுமா தேவியொடு பசைந்துகண் கூடி
  5      அசையுஞ் சீரு மளந்துநொடி போக்கி
         இசைகொள் பாடலி னிசைந்துட னொழுக
         விசைகொள் வீணை விருந்துபடப் பண்ணி
         வசைதீ ருதயணன் மகிழ்ந்துட னிருந்துழி
 
                 (உதயணன் நிலை)
          1 - 8 : பொலிவுடை............இருந்துழி
 
(பொழிப்புரை) அழகு மிக்க கோசம்பிநகரிடத்தே பகைவர் புகுதல் அரிய தனது அரண்மனையின்கண் போர்வலிமை மிக்க வலிய முயற்சியையுடைய வத்தவநாட்டு மன்னனாகிய உதயணமன்னவன் புதுமணப் பேரழகியாகிய பொலிவுடைய பதுமாபதி என்னும் காதல் மிக்க கோப்பெருந்தேவியோடு அன்பால் பெரிதும் ஒன்றுபட்டு அசையும் சீரும் அளந்து கையை நொடித்துத் தாளமிடும் இசையும் அதனைக் கொள்ளும் பண்ணும் பாடலும் போல இயைந்து ஒழுகுங்கால் தன் வசையைத் தீர்த்துக் கொற்றங் கொண்ட அவ்வுதயணமன்னன் நல்லிசை கொண்ட தன் கோடவதி யாழினைப் புதுமையுண்டாக இசைத்து அப்பதுமாபதி நங்கையோடு மகிழ்ந்திருந்த காலத்தே; என்க.
 
(விளக்கம்)    நகர் - கோசம்பி. கோயில் - அரண்மனை. வலிகெழு நோன்றாள் - மிக்க வலிமையுடைய முயற்சி. புதுமணக்காரிகை - புதுமணப்பெண்ணாகிய அழகி. மாதர் - நங்கை என்பதுபட நின்றது. பசைந்து - பற்றுற்று. இசையும் - அதனைக்கொண்ட பாடலும் போல இசைந்து என்க. இசை பதுமாபதிக் குவமை. பாடல் உதயணனுக் குவமை. விருந்து - புதுமை. ஆருணிமன்னனைக் கொன்று கொற்றங் கொண்டமை தோன்ற வசை தீருதயணன் என்றார். மகிழ்ந்து - பதுமாபதியுடன் இருந்துழி என்க.