பக்கம் எண் :

பக்கம் எண்:604

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
            நெடியோ னன்ன நெடுந்தகை மற்றுநின்
  10         கடியார் மார்பங் கலந்துண் டாடிய
            வடிவேற் றடங்கண் வாசவ தத்தை
            வழிபா டாற்றி வல்ல ளாகிய
           அழிகவுள் வேழ மடக்கு நல்லியாழ்
            யானும் வழிபட் டம்முறை பிழையேன்
  15        காண லுறுவேன் காட்டி யருளென
            முள்ளெயி றிலங்கச் செவ்வாய் திறந்து
            சில்லென் கிளவி மெல்லென மிழற்றி
            நகைநயக் குறிப்பொடு தகைவிரல் கூப்ப
 
                    (பதுமாபதியின் கூற்று)
                  9 - 18: நெடியோன்...........கூப்ப
 
(பொழிப்புரை) பதுமாபதி தனது கூர்த்த பற்கள் விளங்கும்படி தனது சிவந்த வாயைத் திறந்து சிலவாகிய மொழிகளால் மெல்ல மிழற்றுவாளாய்த் "திருமால் போன்ற பெரும் புகழையுடையோய்! நின்னுடைய மணங்கமழாநின்ற மார்பிலே சேர்ந்து இன்பங் கூட்டுண்டு நின்னோடு விளையாடிய வடித்த வேல் போன்ற பெரிய கண்களையுடைய வாசவதத்தை நல்லாள் நினக்கு வழிபாடு செய்து நின்பால் கற்றுத் துறைபோகியதும், மதமொழுகா நின்ற யானைகளையும் தன் இன்னிசையால் அடக்கும் சிறப்புடையதுமாகிய நன்மைமிக்க நல்ல கோடவதி என்னும் யாழினையானும் நின்னை வழிபட்டு அந்த முறைமையிலே பிழையேனாய்ப் பயிலுவேன். அவ்வித்தையினை எனக்கும் கற்பித்தருளுக!" என்று நகை இன்பம் தோன்றும் குறிப்போடே கூறி அழகிய தன் கைகளைக் கூப்பி வேண்டா நிற்ப; என்க.
 
(விளக்கம்)    நெடியோன் - திருமால். நெடுந்தகை : விளி. கடி - விளக்கமுமாம். நினக்கு வழிபாடாற்றிக் கற்று வல்லளாகிய யாழ், வேழமடக்கும் யாழ், நல்லியாழ் எனத் தனித்தனி கூட்டுக. அம்முறை, அவ்வாசவதத்தை பயின்ற முறைமை. காணலுறுவேன் - பயின்றறிவேன். காட்டியருள் - கற்பித்தருள். முள்ளெயிறு - முள்போன்று கூர்த்த பல். சில்லென் கிளவி - சில மொழி. தகை விரல் - அழகிய விரலையுடைய கை.