பக்கம் எண் :

பக்கம் எண்:608

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
           
   40        கவன்றன னிருந்த காவன் மன்னற்கு
             வயந்தக குமரன் வந்து கூறும்
             வாலிழைப் பணைத்தோள் வாசவ தத்தைக்கும்
             பாசிழை யல்குற் பதுமா பதிக்கும்
             சீர்நிறை கோல்போற் றானடு வாகி
   45        நின்றி பேரன் பின்றிவட் டாழ்த்து
             நீங்கிற் றம்ம நீத்தோ ணினைந்தென
             ஆங்கவ னுரைப்ப வதுவுங் கேளான்
 
              (வயந்தகன் உதயணனிடம் கூறுதல்)
                40 - 47 : கவன்றனன்.........கேளான்
 
(பொழிப்புரை) இவ்வாறு பெரிதும் வருந்தி இருந்த உதயணன்பால் வயந்தக குமரன் வந்து கூறுவான், "அரசே! நீ தூய அணிகலனணிந்த மூங்கில்போன்ற தோள்களையுடைய வாசவதத்தைக்கும் பசிய அணிகலனணிந்த அல்குலினையுடைய பதுமாபதிக்கும் பொருள்களைச் சீர்தூக்கி நிறுக்கும் துலையினாப் போன்று நடுநிலைமையுடையையாய் இருக்கின்றனை; அத்தகைய நீ இப்பொழுது நின்னைப் பிரிந்த வாசவதத்தையையே நினைந்து இப்பதுமாபதியின்பால் பேரன்பின்றி இகழ்ந்தமையால் அந்நடுநிலைமை நின்னைவிட்டு நீங்கிற்று" என்று அவ்வயந்தக குமரன் கூறா நிற்பவும் அக்கூற்றையுங் கேளானாய்; என்க.
 
(விளக்கம்)   மன்னற்கு : உதயணனுக்கு. சீர் - கனம். நிறைகோல் - துலைநா. நின்றி - நின்றாய். இவட்டாழ்த்து - இப்பதுமாபதியை இகழ்ந்து. தாழ்த்து - தாழ்த்தமையால் என்க. அந்நடு இப்பொழுது நீங்கிற்று என்றான் என்க. அதுவும் - அக்கூற்றையும்.