பக்கம் எண் :

பக்கம் எண்:611

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
          
  60    இகலிடை யிமையா வெரிமலர்த் தடங்கண்
        புகழ்வரை மார்பன் பொருந்திய பொழுதிற்
        கொள்ளென் குரலொடு கோட்பறை கொளீஇ
        உள்ளெயிற் புரிசை யுள்வழி யுலாவும்
        யாமங் காவல ரசைய வேமம்
  65    வாய்ந்த வைகறை வையக வரைப்பின்
 
                  (இதுவுமது)
            60 - 65: இகலிடை............வைகறை
 
(பொழிப்புரை) போர்க்களத்தின்கண் பகைவர் வேல்கொண்டெறியுமிடத்தும் இமைத்தலில்லாத தாமரைமலர் போன்ற தன் பெரிய கண்களைச் சான்றோர் புகழ்கின்ற இரேகைகளையுடைய மார்பினையுடைய அவ்வுதயண மன்னன் சிறிது மூடி அரிதின் துயின்ற பொழுதில் யாமம் காவலர் "கொள் கொள்" என்னும் ஓசையோடு முழங்கும் ஆகோட்பறையினை முழக்கிக்கொண்டு அகமதிலின் உள்ளிடத்தே துயில் மயக்கத்தால் தளர்ந்து நடவா நிற்கும் பாதுகாவலமைந்த வைகறை யாமத்தே, என்க.
 
(விளக்கம்)  கொள்ளென் குரல் - கொள் கொள் என்று ஒலிக்கும் ஓசை. கோட்பறை - காவல் கொள்ளும் பறையுமாம். யாமம் காவலர் இரவு முழுதும் விழித்தமையின் வைகறையில் துயில் மயக்கத்தால் தளர்ந்து நடத்தலின் யாமம் காவலர் அசைய என்றார். ஏமம் - இன்பமுமாம். வைகறையில் துயில் இனிதாகலின் ஏமம் வாய்ந்த வைகறை என்றார் எனினுமாம்.