பக்கம் எண் :

பக்கம் எண்:614

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
          
  85    அளப்பரும் படிவத் தறிவர் தானத்துச்
        சிறப்பொடு சென்று சேதியம் வணங்கிக்
        கடவது திரியாக் கடவுளர்க் கண்டு
        நின்றிடை யிருள்யாம நீங்கிய வைகறை
        இன்றியான் கண்ட தின்னது மற்றதை
  90    என்கொ றானென நன்கவர் கேட்ட
        உருத்தகு வேந்த னுரைத்ததன் பின்றைத்
 
                   (முனிவரைக் கண்டு உதயணன் வினாதல்)
             85 - 91: அளப்பரும்....................பின்றை
 
(பொழிப்புரை) அழகுமிக்க அவ்வேந்தர் பெருமான் அளத்தற்கரிய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டுள்ள துறவோர் பள்ளியின்கண் அவர்க்குரிய கையுறையோடு சென்று ஆங்குள்ள அருகன் கோயிலை வழிபட்டுத் தாம் செய்யக் கடவதாகிய அறத்திற் பிறழ்தலில்லாத முனிவர்களைக் கண்டு வணங்கி நின்று "அடிகளே ! சென்ற இரவின்கண் இருள் மிக்க இடையாமம் கழிந்த வைகறை யாமத்தே யான் கண்ட கனா இஃதாகும். அக்கனவின் பயன்றான் என்கொலோ?" என்று அம் முனிவர் நன்கு கேட்கும்படி தான் கண்ட கனவினை அவர்க்குக் கூறிய பின்னர்; என்க.
 
(விளக்கம்)  படிவம் - தவ ஒழுக்கம். அறிவர்தானம் - துறவோர் பள்ளி. சிறப்பு - கையுறைப் பொருள். சேதியம் - (ஈண்டு அருகன் கோயில்). கடவது - செய்யக் கடவதாகிய அறம். இன்று என்றது, நெருநல் இரவினை. உரு - அழகு : வடிவமுமாம்.