பக்கம் எண் :

பக்கம் எண்:615

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
           திருத்தகு முனிவன் றிண்ணிதி னாடி
           ஒலிகடற் றானை யுஞ்சையர் பெருமகன்
           மலிபெருங் காதன் மடமொழிப் பாவை
  95       இலங்குகதி ரிலைப்பூ ணேந்துமுலை யாகத்து
           நலங்கிளர் நறுநுத னாறிருங் கூந்தல்
           மாசில் கற்பின் வாசவ தத்தை
           முழங்கழன் மூழ்கி முடிந்தன ளென்பது
           மெய்யெனக் கொண்டனை யாயின் மற்றது
  100       பொய்யெனக் கருது புரவ லாள
 
             (ஒரு முனிவன் கனாப்பயன் உரைத்தல்)
                92 - 100: திருத்தகு...........புரவலாள
 
(பொழிப்புரை) அத்துறவோருள் வைத்து மேம்பாடுமிக்க ஒரு துறவி அக்கனவினை ஆராய்ந்து உதயணனை நோக்கி, "வேந்தே! முழங்காநின்ற கடலையொத்த பெரிய படையினையுடைய உஞ்சை வேந்தனாகிய பிரச்சோதன மன்னனுடைய மிக்க பேரன்பினையுடைய மடப்பமுடைய மொழிகளையுடைய மகளாகிய விளங்கா நின்ற ஒளியுடைய இலை வடிவமாகச் செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த ஏந்திய முலைகளையுடைய மார்பினையும் அழகுமிக்க நுதலையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் குற்றமற்ற கற்பினையும் உடைய வாசவதத்தை என்னும் நின்தேவி ஆரவாரிக்கின்ற தீயிலே முழுகி இறந்துபட்டாள் என்னும் அச் செய்தியை உண்மையே என்று நீ இதுகாறும் கருதினை ; ஆயினும் அச் செய்தி பொய்யேயாகும் என்று இப்பொழுது எண்ணுவாயாக !" என்க.
 
(விளக்கம்)  படிவம் - திருத்தகு முனிவன் - மேன்மை தக்கிருக்கின்ற துறவோன். முடிந்தனள் - இறந்துபட்டாள். மற்றது - அச்செய்தி. கருது -  கருதுக. புரவலாள: விளி.