உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
5. கனாவிறுத்தது |
|
இந்நா ளகத்தே
சின்மொழிச்
செவ்வாய் நன்னுதன்
மாதரை நண்ணப்
பெறுகுவை பெற்ற
பின்றைப் பெய்வளைத்
தோளியும்
கொற்றக் குடிமையுட் குணத்தொடும்
விளங்கிய 105 விழுப்பெருஞ்
சிறப்பின் விஞ்சைய
ருலகின் வழுக்கில்
சக்கரம் வலவயி
னுய்க்கும் திருமகற்
பெறுதலுந் திண்ணிது திரியா
|
|
(இதுவுமது) 101
- 107: இந்நாள்............திரியா
|
|
(பொழிப்புரை) "மன்ன! நீ இன்றைக்கே சிலவாகிய மொழி பேசுதலையும் சிவந்த வாயையும் நல்ல
நெற்றியையும் உடைய அவ்வாசவதத்தையை அடைகுவை ! அவளை அடைந்த பின்னர் வளையலணிந்த
தோள்களையுடைய அத்தேவிதானும், வெற்றியுடைய உயர்குடியின்கண் தோன்றியதனாலுண்டாகும்
நற்பண்புகளோடும் விளங்கிய மிகப்பெருஞ் சிறப்பினையுடைய விச்சாதரர்
உலகத்தின்கண்ணும் குற்றமற்ற தனது ஆணைச் சக்கரத்தைத் தனது ஆற்றலாலே செலுத்தும்
திருமகன் ஒருவனைப் பெறுதலும் உறுதி; இவ்விரண்டும் பிறழமாட்டா";
என்க.
|
|
(விளக்கம்) இந்நாளகத்தே
- இன்றே. மாதரை : வாசவதத்தையை. தோளி : வாசவதத்தை. வழுக்கு - குற்றம்.
சக்கரம் - ஆணை. திண்ணிது : ஒருமை பன்மை மயக்கம். மாதரைப் பெறுதலும் அவள் மகப்
பெறுதலும் ஆகிய இரண்டும் திரியா
என்க.
|