பக்கம் எண் :

பக்கம் எண்:617

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
           காரணங் கேண்மதி தாரணி மார்ப
           ஆயிர நிரைத்த வாலிதழ்த் தாமரைப்
  110       பூவெனப் படுவது பொருந்திய புணர்ச்சிநின்
           தேவி யாகுமதன் றாதக டுரிஞ்சி
           முன்றாண் முடக்கிப் பின்றா ணிமிர்த்துக்
           கொட்டை மீமிசைக் குளிர்மதி விசும்பிடை
           எட்டு மெய்யோ டிசைபெறக் கிடந்த
  115       விள்ளா விழுப்புகழ் வெள்ளே றென்பதை
           முகனமர் காதனின் மகனெனப் படுமது
 
                       (இதுவுமது)
             108 - 116 : காரணம்............எனப்படும்
 
(பொழிப்புரை) அவ்வாறு யான் கூறுதற்கியன்ற காரணந்தான் யாதெனின் கூறுவேன் கேள். மலர்மாலையணிந்த மார்பனே! நின் கனவின்கண் நிரல்பட்ட ஆயிரம் வெள்ளிய இதழ்களையுடைய வெண்டாமரைப்பூ என்று நின்னால் கூறப்படுமது நின்னோடு உளம் பொருந்திய நின் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையைக் குறிக்கும். இனி அத் தாமரைப்பூவின் துகள் தன் வயிற்றிலே படும்படி முன்கால்களை முடக்கிக்கொண்டு அந்தத் தாமரைப் பொகுட்டின்மேலே குளிர்ந்த திங்களையுடைய வானத்தினைத் தீண்டாநின்ற உடம்பொடு புகழ்பெறக் கிடந்த நீங்காத சிறந்த புகழையுடைய வெள்ளைக்காளை என்று உன்னால் கூறப்படுவது நீ நின்முகத்தால் விரும்பி இனிது நோக்குதற்குக் காரணமான அன்புடைய நின் மகனைக் குறிக்கும்; என்க.
 
(விளக்கம்)  வாலிதழ் - வெள்ளை இதழ். தாமரை தேவியாகும்; காளை நின்மகனாகும் என்க. தாது - பூந்துகள். உரிஞ்சி - உரிஞ்ச. கொட்டை - பொகுட்டு. விசும்பிடை எட்டும் மெய் - வானைத் தீண்டும் உடல். இசை - புகழ். வெள்ளேறு - வெள்ளை விடை. என்பதை: ஐகாரம் சாரியை.