பக்கம் எண் :

பக்கம் எண்:619

உரை
 
4. வத்தவ காண்டம்
 
5. கனாவிறுத்தது
 
         அன்று மின்று மறிவோ ருரைப்பதை
         என்றுந் திரியா தொன்றே யாதலின்
 125      உண்டுகொ லெதிர்தலென் றுள்ளே நினையாப்
         பெருந்தண் கோயிலு ளிருந்த பொழுதில்
         உருகெழு மந்திரி வரவதை யுணர்த்தலிற்
         புகுதக வென்றுதன் புலம்பகன் றொழிய
         இகல்வேல் வேந்த னிருத்த லாற்றான்
 
                   (உதயணன் செயல்)
              123 - 129 : அன்றும்..............ஆற்றான்
 
(பொழிப்புரை) அது கேட்ட உதயணன் பண்டை நாள் தொடங்கி இற்றைநாள் வரையில் அறிவுடையோர் கூறும் மொழி வாய்மையேயாதலன்றி ஒருநாளும் பிறழ்தல் இல்லை; ஆதலாலே யாம் நம் ஆருயிர்க் காதலியாகிய வாசவதத்தையை மீண்டும் காணுதல் உண்டாகுமோ என்று தன் நெஞ்சினுள்ளே நினைத்து அப்பெருமகன் பெரிய குளிர்ந்த தன் அரண்மனைக்குட் சென்று இருந்தபொழுது சிறந்த தோற்றமுடைய தன் அமைச்சனாகிய உருமண்ணுவாவின் வருகையை வாயிலோர் சென்று உணர்த்துதலாலே அங்ஙனமாயின் அவ்வமைச்சனை இங்கு அழைத்து வருக என்று வாயிலோர்க்குக் கூறி அச்செய்தி காரணமாக அவ்வுதயணன் தன் வருத்தம் தீர்ந்தொழிய அவன் வருந்துணையும் வாளாவிருக்க இயலாதவனாய்; என்க.
 
(விளக்கம்)  அன்றும் இன்றும் என்றது, பழங்காலத்தும் இப்பொழுதும் என்றவாறு. அறிவோர் உரைப்பது என்றும் திரியாதென்பதனை, "அம்மூன்று முற்ற வரிதலால் தம்மின் உறழா மயங்கி உறழினும் என்றும் பிறழா பெரியார் வாய்ச்சொல்" (பு. வெ. 167 குறிப்புரை). ஒன்றேயாதலின் - உண்மையேயாதலின், வாசவதத்தையை எதிர்தல் உண்டுகொல் என்று நினையா என்க. உரு - தோற்றம். வாயிலோர் உணர்த்தலின் என்க. இகல்வேல் வேந்தன் - போர் வேலினை உடைய உதயணமன்னன். அவன் வருந்துணையும் இருத்தலாற்றான் என்க.