பக்கம் எண் :

பக்கம் எண்:625

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
            மானங் குன்றா வயந்தகன் கூறும்
            நயந்துநீ யரற்று நன்னுத லரிவையும்
            பயந்த கற்பிற் பதுமா பதியுமென்
            றிருவ ருள்ளுந் தெரியுங் காலை
  20        யாவர் நல்லவ ரறிவினு மொழுக்கினும்
            யாவரை யுவத்தி யாவதை யுணரக்
            காவ லாள கரவா துரையென
 
           (வயந்தகன் உதயணனை வினாதல்)
            16 - 22 : மானம்............உரையென
 
(பொழிப்புரை) மானம் குறையாத வயந்தக குமரன் உதயணனை நோக்கி அவன் மன நிலையை மாற்றும்பொருட்டு, "பெருமானே ! நீ இப்பொழுது பெரிதும் விரும்பிப் புலம்புவதற்குக் காரணமான அழகிய நெற்றியையுடைய வாசவதத்தையும் பயன்மிக்க கற்பினையுடைய பதுமாபதியும் என்னும் இவ்விரு நங்கையருள்ளும் ஆராயுங்கால் நினக்குச் சிறந்தவர் யார் ? நல்லறிவினாலும் நல்லொழுக்கத்தினாலும் மிகச் சிறந்தவர் என்று நீ இவருள் யாரைப் பெரிதும் விரும்புகின்றனை ? உலகங் காவலனே! யான் உணரும்படி மறைக்காமல் உரைத்தருளுக" என்று வேண்டாநிற்ப; என்க.
 
(விளக்கம்)  கூறும் - கூறுவான். அரிவை : வாசவதத்தை. பயந்த - பயன்பட்ட. கற்புடைமை மகளிர்க்குப் பெரும்பயன் நல்குமாகலின் பயந்த கற்பு என்றார். தெரியுங்காலை - ஆராயுங்கால். உவத்தி - விரும்புவாய். ஆவதை - அதனை. காவலாள : விளி. கரவாது - மறையாமல்.