பக்கம் எண் :

பக்கம் எண்:626

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
         முறுவல் கொண்டவ னறியு மாயினும்
         பல்பூட் சில்சொற் பட்டத் தேவியைச்
  25     சொல்லாட் டிடையுஞ் செல்ல றீர்தலிற்
         பீடுடை யொழுக்கிற் பிரச்சோ தனன்மகள்
         வாடிடை மழைக்கண் வாசவ தத்தை
         கண்ணகன் ஞாலத்துப் பெண்ணருங் கலமவள்
         செறுந ருவப்பச் செந்தீ யகவயின்
  30     உறுதவ மில்லேற் கொளித்தன டானென
         மறுகுஞ் சிந்தை மன்னனை நோக்கி
 
               (உதயணன் விடை கூறுதல்)
               23 - 31 : முறுவல்..............நோக்கி
 
(பொழிப்புரை) வயந்தகன் வினாவினைக் கேட்டுப் புன்முறுவல் பூத்த உதயணமன்னன் இவ் வினாவிற்குரிய விடையினை அவ்வயந்தகன் அறிவான் என்பது தனக்குத் தெரிந்திருந்தேயும், பல்வேறு அணிகலன்களையும் ஒரு சில மொழிகளையே பேசுதலையுமுடைய கோப்பெருந் தேவியாகிய அவ் வாசவதத்தையைப் பற்றித் தான் பிறரோடு சொல்லாட்டம் நிகழ்த்தும்பொழுது தன் பிரிவுத் துன்பம் அகலுதலின் அவ்வினாவிற்கு விடை கூறத் தொடங்கி, "நண்பனே! பெருமைமிக்க நல்லொழுக்கினையுடைய பிரச்சோதன மன்னன் மகளும் மெலிந்த இடையையும் குளிர்ந்த கண்களையுடையவளும் ஆகிய வாசவதத்தை ஒருத்தியே இடமகன்ற இந் நிலவுலகத்தின்கண் வாழ்கின்ற பெண்டிர்க்கெல்லாம் பேரணிகலம் போன்றவள் ஆவள். அந்தோ ! அத்தகைய நங்கை என் பகைவர் உவக்கும்படி சிவந்த தீயினுள் மூழ்கி மிக்க தவமில்லாத என்னிடத்தினின்றும் மறைந்தொழிந்தனளே" என்று கூறிச் சுழலாநின்ற நெஞ்சினையுடைய அம் மன்னனை நோக்கி; என்க.
 
(விளக்கம்)  அவன் : அவ்வயந்தகன். தேவி : வாசவதத்தை. செல்லல் - துன்பம். பீடு - பெருமை. ஒழுக்கின் வாசவதத்தை, மகள் வாசவதத்தை, கண் வாசவதத்தை எனத் தனித்தனி கூட்டுக. பெண்ணருங்கலம் - பெண்டிர்க்கெல்லாம் பேரணிகலம் போன்றவள்.

  "மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
   விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்
   பெண்ணருங் கலமிது பெறுதன் மானிடர்க்
   கெண்ணருந் தகைத்தென விறைவ னெண்ணினான்"
 (சூளா. இரதநூபுரச். 110)

எனவரும் தோலாமொழியையும் நினைக. செறுநர் - பகைவர். உறு தவம் - மிக்க தவம். மறுகும் - சுழலாநிற்கும்.