பக்கம் எண் :

பக்கம் எண்:627

உரை
 
4. வத்தவ காண்டம்
 
6. பதுமாபதியை வஞ்சித்தது
 
           வெங்கண் வேந்தர் தங்கட் குற்ற
           தங்கண் ஞாலத் தாரே யாயினும்
           அகலிடத் துரைப்பி னற்றம் பயத்தலின்
  35       அவரின் வாழ்வோ ரவர்முன் னின்றவர்
           இயல்பி னீர்மை யிற்றென வுரைப்பின்
           விம்ம முறுதல் வினாவது முடைத்தோ
           அற்றே யாயினு மிற்றுங் கூறுவென்
 
                  (வயந்தகன் கூற்று)
             32 - 38 : வெங்கண்..............கூறுவென்
 
(பொழிப்புரை) "இறைமகனே! கண்ணோடாமையையுடைய அரசர்களுக்கு நிகழ்ந்த நிகழ்ச்சியை அகன்ற இவ்வுலகத்தின்கண் எத்தகையரேயாயினும் உலகின்கண் எடுத்துக்கூறின் அச் செயல் அவர்க்குக் கேடு பயத்தல் ஒருதலையாகலின் அவ்வரசரின் குடை நிழலிருந்து வாழுவோரே அவ்வரசர் முன்னிலையினின்று அவரது பண்பின்மையை இஃதென்று எடுத்துக் கூறின் அங்ஙனம் கூறியவர் பெரிதும் துன்புறுதல் கேட்டறிய வேண்டுமொரு செயலன்று; அங்ஙன மிருப்பினும் பெருமானே, யான் இன்னும் கூறத்துணிகின்றேன். கேட்டருள்க" என்க.
 
(விளக்கம்)  வெங்கண் - கண்ணோட்டமில்லாத கண். உற்றது - நேர்ந்த பழியை. அற்றம் - கேடு, சாவுமாம். இயல்பு இல் நீர்மை - பண்பற்ற தன்மை. விம்மம் - துன்பம்; ஆகுபெயர். வினாவதும் உடைத்தோ - கேட்கவேண்டுமோ. அற்றேயாயினும் - அத்தன்மைத்தாயினும். இற்றும் - இன்னும்.